கர்நாடக வனப் பகுதிக்குள் யானைகளை விரட்டும் பணி தீவிரம்

சூளகிரி அருகே முகாமிட்டுள்ள 30 யானைகளை கர்நாடக வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினர் போராடி வருகின்றனர்.

சூளகிரி அருகே முகாமிட்டுள்ள 30 யானைகளை கர்நாடக வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினர் போராடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த போடூர்பள்ளம் காப்பு காட்டில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வழியாக கர்நாடக மாநில வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும், யானைகள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் அதே இடத்தில் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு போடூர்பள்ளம் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், ஆழியாளம், ராமாபுரம், குக்கலப்பள்ளி, பண்ணப்பள்ளி வழியாக பிள்ளை கொத்தூர் வரை சென்றன.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட யானைகள், காமன்தொட்டி, உத்தனப்பள்ளி சாலையில் உள்ள குக்கலப்பள்ளி பகுதியில் சாலையை கடந்து, ராமாபுரம் பகுதிக்கு வந்தன. அங்கு தக்காளி, ராகி போன்ற பயிர்களைச்0 சேதப்படுத்தின.
இதேபோல ஆழியாளம், பிள்ளைகொத்தூர் போன்ற பகுதிகளிலும் யானைகளால் பயிர் சேதம் ஏற்பட்டது. சேதமடைந்த பயிர்களை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். ராமாபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை, வனத் துறையினர் பட்டாசு வெடித்து வனப் பகுதிக்கு விரட்டினர்.
அப்போது 17 யானைகள் ஒரு குழுவாகவும், மீதமுள்ள 13 யானைகள் மற்றொரு குழுவாகவும் பிரிந்து போடூர்பள்ளம் காப்பு காட்டிற்குத் திரும்பின. கர்நாடக வனப் பகுதிக்கு விரட்டப்பட்ட 4 காட்டு யானைகள், மீண்டும் அங்கிருந்து பேரிகை அடுத்த தீர்த்தம் அருகே உள்ள கரியானப்பள்ளி காப்பு காட்டில் முகாமிட்டுள்ளன.
வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், குண்டகுறுக்கி பகுதியில் உள்ள வெங்கடேசப்பாவின் விவசாய நிலத்திற்குள் புகுந்து ராகி பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com