கொசுப் புழு உற்பத்திக்கு காரணமான தொழில் அதிபர்களிடம் அபராதம் வசூல்

கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கொசுப் புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த தொழில் அதிபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கொசுப் புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த தொழில் அதிபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் ஏடிஎஸ் கொசு ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 இந்த நிலையில், கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
 கிருஷ்ணகிரி நகராட்சி, சுகாதாரத் துறை ஆகியன இணைந்து அங்குள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்த போது, நோயை பரப்பும் கொசுப் புழுக்களை உற்பத்தியை தடுக்கத் தவறிய இரண்டு தொழில்நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்து தலா ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
 மேலும், நகராட்சி, சுகாதாரத் துறைகளின் பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 பின்னர் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், செய்தியாளர்களிடம் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ள 700 தாற்காலிக மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். 175 இயந்திரங்கள் மூலம் டெங்கு தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
 இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்புள்ளன. நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 162 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 நாள்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களை சுகாதாரத் துறைக்கு அளிக்கும்படி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 அந்தப் பட்டியில் உள்ள மாணவர்களை சுகாதாரத் துறையினர் நேரில் சந்தித்து பரிசோதனை செய்து, நோய் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய சிகிச்சை அளிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
 அப்போது, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பிரியா ராஜ், வட்டாட்சியர் கன்னியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com