சுகாதாரத்தை பராமரிக்காத வீடுகளின் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும்: ஆட்சியர்

சுகாதாரத்தை பராமரிக்காத வீட்டின் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்  சி.கதிரவன் எச்சரித்தார்.

சுகாதாரத்தை பராமரிக்காத வீட்டின் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்  சி.கதிரவன் எச்சரித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசு புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் எதிரொலியாக மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைந்து வருகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் வார்டுகள் வாரியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்,  ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடிநீர்த் தொட்டிகளைப் பராமரிக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும்,  வீட்டை சுற்றிலும் பொது சுகாதாரத்தை பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். குடிநீர்த் தொட்டிகளை சுகாதாரமாகப் பராமரிக்காத வீடுகளின் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
ஆய்வின் போது, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பிரியா ராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சிசில்தாமஸ், சுகாதார ஆய்வாளர் மோகன சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஒசூரில் 3 கடைகளுக்கு அபராதம்... டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொது சுகாதாரம் குறித்து ஒசூரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், சுகாதாரச் சீர்கேடுகளுடன் காணப்பட்ட  ஒரு வீட்டின் குடிநீர் விநியோகத்தைத் துண்டிக்கவும் ,3 கடைகளுக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
சூசூவாடியில் சார்- ஆட்சியர் சந்திரகலா, ஒசூர் நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் மற்றும் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,  டெங்கு நோய்த் தடுப்பு என்பது ஒவ்வொருவரிடம் கடமையாகும். வீடுகளைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக குடிநீர்த் தொட்டிகளில் உள்ள சுத்தமான தண்ணீரில்தான் டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகிறது.
இதைத் தடுக்க நீர்த் தேக்க தொட்டிகளை நன்கு மூடி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல வீட்டின் அருகே காய்ந்த தேங்காய் ஓடுகள், பயன்படுத்தாத உரல்கள், பிளாஸ்டிக் பொருள்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரத்தை பராமரிக்காத  ஒரு உணவு விடுதி, வாகன பழுது நீக்கம் கடை உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், சூசூவாடி பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நீர்த் தேக்கிவைத்த ஒரு வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com