மா செடிகளை அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

தோட்டக்கலைத் துறை மூலம் மா செடிகளை நர்சரியிலிருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தோட்டக்கலைத் துறை மூலம் மா செடிகளை நர்சரியிலிருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆண்டுதோறும் 50 லட்சம் மா கன்றுகள் ஏற்றுமதியாகிறது. விவசாய பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறையைப் போக்க நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மாஞ்செடி உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மா சாகுபடியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இதேபோல மா கன்றுகள் உற்பத்தி, ஏற்றுமதியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
போச்சம்பள்ளி, பந்தரஹள்ளி, பனங்காட்டூர், அரசம்பட்டி, மஞ்சமேடு, பண்ணந்தூர், சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட நர்சரிகளில் இருந்து குறைந்தது 30 லட்சம் முதல் அதிகபட்சம் 50 லட்சம் மா செடிகள் பக்கத்து மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து புலியூரைச் சேர்ந்த மா உற்பத்தியாளர் பிஎஸ்கே சக்திவேல் கூறியதாவது, மா நாற்றை நன்கு 
வளர்ந்துள்ள தாய் செடியில் உள்ள கிளைகளைச் சீவி கயிற்றால் தண்ணீர் புகாத வகையில் பிளாஸ்டிக் பையினால் கட்டி இணைப்பது முதல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது வரை ஒரு செடி உற்பத்தி செய்ய அதிகபட்சம் ரூ.50 வரை செலவாகிறது. 
பெங்களூரா, பீத்தர், அல்போன்சா, செந்தூரா, காலப்பட், பங்கனப்பள்ளி, மல்கோவா என அனைத்து ரக செடிகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த செலவினம் ரகத்திற்கேற்ப மாறுபடுகிறது. உற்பத்தி செய்யப்படும் மா கன்றுகள் தருமபுரி, திருவண்ணைமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். 
மேலும் ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களிலிருந்து விவசாயிகள் நேரடியாக வந்து வாகனங்கள் மூலம் ஏற்றி செல்கின்றனர். மா உற்பத்தி மூலம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மா செடிகளை அரசே தோட்டக்கலைத் துறை மூலம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தது. தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மா உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மீண்டும் மா செடிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com