காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு

காவிரி உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்புவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளனவா

காவிரி உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்புவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளனவா என ஆராய்வதற்காக 6 பேர் கொண்ட ஓய்வுபெற்ற பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
தெரிவித்தார்.
ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களிடம்  கூறியது: கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதாலும், கேரளத்தின் வயநாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்  பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன.
கர்நாடகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் நொடிக்கு 2.10 கன அடி தண்ணீர்  திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று ஏற்பாடாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒகேனக்கல்லில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, உணவுகள் வழங்கப்பட்டு  வருகின்றன. மேலும், இவர்களுக்கு நிரந்தர மாற்று ஏற்பாடாக, அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு பென்னாகரம் சோதனைச் சாவடி பகுதியில் நிலம் வழங்கப்படும்.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்புவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளனவா என ஆராய்வதற்காக 6 பேர் கொண்ட ஓய்வுபெற்ற பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இத்திட்டத்துக்காக ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அஞ்செட்டி செல்லும் சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. எனவே, அவற்றுக்கு  பதிலாக மாற்று சாலை ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும், காவிரி கரையோரப் பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.
ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றுப் பகுதியில்  இறங்கவோ, ஆற்றுப் பகுதியில் நின்று சுயபடம் எடுக்கவோ வேண்டாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com