ஊத்தங்கரை வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல்

ஊத்தங்கரை வட்டாரத்தில்  காரப்பட்டு தகரப்பட்டி எளச்சூர் ஆகிய கிராமங்களில் வயலாய்வு செய்ததன் மூலம் படைப்புழு தாக்குதல் கண்டறியப்பட்டது.

ஊத்தங்கரை வட்டாரத்தில்  காரப்பட்டு தகரப்பட்டி எளச்சூர் ஆகிய கிராமங்களில் வயலாய்வு செய்ததன் மூலம் படைப்புழு தாக்குதல் கண்டறியப்பட்டது.
படைப்புழு தாக்கும் பயிர்கள்:  மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம், சோளம் மற்றும் புல் வகைகளில் இதன் தாக்குதல் அதிகம் தென்படும். இவற்றை தவிர பருத்தி, சிறு தானியங்கள், நிலக்கடலை, கரும்பு, சோயாபீன்ஸ், புகையிலை மற்றும் கோதுமையிலும் இதன் தாக்குதல் பரவலாக தென்படும். 
பாதிப்பு அறிகுறிகள்: தாய் அந்துப்பூச்சி 100-200 முட்டைகள் கொண்ட குவியல்களை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி சேதத்தை உண்டுபண்ணும். இதனால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாக காணப்படும். இளம் புழுக்கள் மீலிழைகளை உருவாக்கும். இதன் மூலம் காற்றின் திசையில் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு செல்லும். இரவு நேரங்களில் அதிக சேதத்தை விளைவிக்கும். 
மூன்று முதல் ஆறு நிலை புழுக்கள் இலையுறையினுள் சென்று பாதிப்பை உண்டாக்கும். இதனால் இலைகள் விரிவடையும் போது அதில் வரிசையாக துளைகள் தென்படும். இளம் செடிகளில் நுனிக்குருத்து சேதமடைந்தால் பக்க இலைகள் மற்றும் கதிர்கள் தோன்றும். ஒரு இலையுறையினுள் இரண்டு அல்லது மூன்று புழுக்கள் மட்டுமே இருக்கும். உருவத்தில் பெரிதாக இருக்கும். 
மேலாண்மை:  உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களைஅழிக்கலாம். மண்ணின் வளம் மற்றும் ஈரப்பதத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதிகளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். விதைநேர்த்தி செய்வது ஆரம்பக் கட்டத்தில் பாதிப்பை தவிர்க்க இயலும். 
பருவம் தாழ்த்தி பயிர் செய்வதால் பாதிப்பு அதிகம் வர வாய்ப்புள்ளது. வயலை சுற்றியும் பயறுவகை மரப்பயிர்கள் அல்லது ஆண்டு முழுவதும் பூக்கும் தாவரங்களை தடுப்புப் பயிராக விதைக்கலாம். நேப்பியர் புல்லை வயலைச் சுற்றிலும் வரப்பு பயிராக நடுவதன் மூலம் தாய் அந்துப் பூச்சிகளை நேப்பியர் புல்லில் முட்டைகளை வைக்கச் செய்யலாம். நேப்பியர் புல்லில் குறைவான சத்துள்ளதால் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் வளர்ச்சி குறைந்து இறந்துவிடும். வேலி மசாலை மக்காச் சோளத்தில் ஊடுபயிராக செய்யலாம்.  
மக்காச்சோளத்துடன் மரவள்ளி அல்லது பீன்ஸ் அல்லது காராமணி அல்லது மொச்சை போன்ற படைப் புழுவால் அதிகம் விரும்பப்படாத பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்யலாம். குறுகியகால மக்காச்சோள ரகங்களை பயிரிடுவது படைப்புழுவின் பாதிப்பில் இருந்து தவிர்க்க இயலும். வயலைச் சுற்றியும் களைகள் இல்லாமல் மேலாண்மை செய்ய வேண்டும்.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பின்பற்ற வேண்டியவை:  விளக்குப் பொறி வைத்து கூட்டுப்புழு மற்றம் அந்துப்பூச்சிகளை கவரலாம். நெல் தவிடு 10 கிலோவுடன் வெல்லம் 25 கிலோ மற்றும் குளோரோபைரிபாஸ் 1 லிட்டர் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வயல்களை சுற்றி வைக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு குருணை (போரேட்) மருந்தை 10 கிராம், 3 கிலோ அல்லது கார் போபியூரான் 3 கிராம்,  7 கிலோவை 15 கிலோ மணலுடன் கலந்து மக்காச்சோளப் பயிரின் இலைகுறுத்துப் பகுதிகளில் இடவும். பாதிப்பு அதிகமாகும் போது பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 2.0 மி.லி/லி அல்லது ஸ்பைனோசேட் 0.5 மி.லி/லி அல்லது குளோர்ஆன்டிரி நில்ப்ரோல் 0.3 மி.லி/லி அல்லது இன்டாக்சாகார்ப் 1.0 மி.லி/லி அல்லது ஏமா மெக்டின் பென்ஜோயேட் 0.4 கி/லி முறைகளை பின்பற்றுமாறு ஊத்தங்கரை வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) க.புனிதவள்ளி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com