ஊத்தங்கரை அருகே சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்

ஊத்தங்கரை அருகே கதவணி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்படுகிறது.

ஊத்தங்கரை அருகே கதவணி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்படுகிறது.
 ஊத்தங்கரை ஒன்றியம், கதவணி ஊராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஏழை மக்கள் பயன்பெரும் வகையில் 100 வீடுகள் உள்ளன. ஊத்தங்கரை -திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் இந்த சமத்துவபுரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு வீட்டுமனைக்கும் ஐந்து செண்டு காலிமனை ஒதுக்கப்பட்டு, அதில் வீடு கட்டப்பட்டுள்ளது. கடந்த 2010 - 2011-ஆம் ஆண்டு வீடுகள் தலா ரூ.1,64,217 மதிப்பில் கட்டப்பட்டது. இந்த சமத்துவபுரத்தில்  எஸ்சி பிரிவினருக்கு 40, எம்.பி.சி.பிரிவினருக்கு 25, பி.சி.க்கு 25,  ஒ.சி.பிரிவினருக்கு  10 வீடுகள் என மொத்தம் 100 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில்  ஒசி பிரிவினரில் ஒருவருக்கு மட்டும் வீடு வழங்கப்பட்டது. மீதமுள்ள 9 வீடுகளுக்கு பயனாளிகள் இல்லாததால் 91 வீடுகள் மட்டும்  வழங்கப்பட்டன. மீதமுள்ள 9  வீடுகளை ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த பிராமணர்கள் தங்களுக்கு வழங்கக்  கோரி அதிகாரிகளிடம் அளித்த மனுக்களின் அடிப்படையில் சமத்துவபுரத்தில் உள்ள 9 வீடுகளை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து  மாவட்ட ஆட்சியர்,  அதற்கான ஆணையை கடந்த 20.11.2017 இல் வழங்கினார். உத்தரவு பெற்றவர்கள் சமத்துவபுரத்தில்  ஒதுக்கப்பட்ட 18, 28, 38, 48, 58, 68, 78, 88, 98  எண்களைக் கொண்ட  வீடுகளுக்குச் சென்றபோது அந்த வீடுகளில் ஏற்கெனவே குடியிருந்து வருபவர்கள் தாங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதால் காலி செய்ய முடியாது என கூறினர்.
இதையடுத்து தங்களுக்கு ஒதுக்கீடு செய்த வீடுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பிராமணர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து  ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி, ராஜசேகர் மற்றும் அலுவலர்கள், 9 வீடுகளில் குடியிருப்போரைக்  காலி செய்வதற்கான உத்தரவை வழங்கினர்.அப்போது, சமத்துவபுரத்தில் காரப்பட்டு, கதவணி, அருணபதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.  வீடுகளைப் பெற ரூ.60 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம்  வரை கொடுத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 10-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை சுமார் ரூ.3 லட்சத்துக்கு  வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை மாதம் ரூ.1000- க்கு வாடகைக்கு விட்டுள்ளனர். சுமார் 15- க்கும் மேற்பட்ட வீடுகள் பூட்டியே  உள்ளன. 
இதுகுறித்து 9 வீடுகளில் வசித்துவருவோர் கூறியது:  நாங்கள் இந்த நிலத்தை பல தலைமுறையாகப் பயன்படுத்தி வந்தோம். இந்த நிலத்தை சமத்துவபுரம் அமைக்க ஒப்படைக்க வேண்டும் என்றும்,  அப்படி ஒப்படைக்கும்போது உங்களுக்கும் வீடு ஒதுக்கித் தரப்படும் எனவும் தெரிவித்தனர். 
அதை நம்பி, நாங்கள் நிலத்தை ஒப்படைத்தோம். தற்போது நாள்கள் குடியிருக்கும் வீடுகளை வேறு பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு வீட்டைக் காலி செய்யுமாறு கூறுகின்றனர்.  சமத்துவபுரம் அமைவதற்கு எங்கள் அனுபவத்திலிருந்த நிலத்தைக் கொடுத்தோம். தற்போது எங்களுக்கு வேறு வீடுகள் எதுவும் கிடையாது என வேதனையுடன் தெரிவித்தனர்.இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், பயன்பாட்டில் இல்லாமல் உள்ள வீடுகளை ஆய்வு செய்தனர்.அதில் 9 பயனாளிகளுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.அரசு விதிமுறையின் படி உறுதிமொழிப் பத்திரத்தில் கூறியுள்ளபடி பயனாளிகள் வீட்டை 30 ஆண்டுகளுக்கு  விற்கவோ,  வாங்கவோ கூடாது என்று விதி இருந்தும் வீடுகளை சிலர் விற்றுச் சென்றது ஆய்வில் தெரியவந்தது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com