காவிரி விவகாரம்:  குடியரசுத் தலைவரைச் சந்திக்க விவசாயிகளை அழைத்து செல்ல வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழக விவசாயிகளின் வேதனையை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழக விவசாயிகளின் வேதனையை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுடனான மண்டல மாநாட்டில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களிடம்  அவர் கூறியது:
காவிரி நிதிநீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளையும்,  மக்களையும் வேதனை அடையச் செய்துள்ளது. கூடுதல் நீர் தேவை என்ற நிலையில்,  தற்போது நிலத்தடி நீர்மட்டம் அடிப்படையில் நதிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
பயிர்கள் கருகி வருவதால்  மனமுடைந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  இந்த நிலையில், விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்து,  புதிய கடன்கள் வழங்க வேண்டும்.
தற்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.  அதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.  கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது.  தமிழக விவசாயிகளுக்கு தண்டனை அளிக்கும் தீர்ப்பாக உள்ளது.  தற்போதைய தீர்ப்பு தொடர்பாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா?  அடுத்த நடவடிக்கை குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அனைத்து கட்சிகள்,  விவசாயிகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு குடியரசுத் தலைவரைச் சந்தித்து,  தமிழக விவசாயிகளின் வேதனைகளை உணரச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தமிழகத்தில் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப்படுகிறது.  இதை அதிகாரிகள் ஆய்வு செய்து குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.  
மின் வாரிய ஊழியர்களின் நியாமன கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவேண்டும்.  மின் நிறுத்தத்தால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பேருந்து கட்டண உயர்வு போன்ற பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும், மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதுபோன்ற அரசின் செயல்பாட்டால் வருங்காலத்தில் மக்கள் அதரவு தர மாட்டார்கள். எரிபொருள் விலை உயர்வு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை.  நடிகர்கள் கட்சி தொடங்க உள்ள நிலையில்,  தமிழகத்தில் இனிவரும் காலங்களில் கூட்டாட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
     அரசியல் கட்சிகள் நடுநிலையாளர்களின் ஆதரவைப் பெறுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.  தற்போதைய சூழ்நிலையில் குழப்ப நிலையே உள்ளது.  காலம்தான் முடிவு செய்யும் என்றார்.
தொடர்ந்து சேலம், தருமபுரி,  திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசினார். இக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ்,  முன்னாள் எம்.பி.  தீர்த்தராமன்,  இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா,  முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், மாநில துணைச் செயலாளர்கள் காசிலிங்கம், தசரதன், மாவட்டச் செயலாளர் பழனிக்குமார்,  நகரத் தலைவர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com