"ஜன. 25-க்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் இருக்க வேண்டும்'

மத்தூர் ஒன்றியம் கண்ணன்டஅள்ளி, களர்பதி ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பறைகள் கட்டுமானப் பணிகளை கிருஷ்ணகிரி ஆட்சியர் வெள்ளிக்கிழமை

மத்தூர் ஒன்றியம் கண்ணன்டஅள்ளி, களர்பதி ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பறைகள் கட்டுமானப் பணிகளை கிருஷ்ணகிரி ஆட்சியர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு  ஆய்வு மெற்கொண்டார். மேலும், கழிப்பறைகள் இல்லாத வீடுகளுக்கு நேரடியாக சென்று தனிநபர் கழிப்பறையின் அவசியத்தை எடுத்துரைத்து கழிப்பறைகள் கட்ட வலிறுத்தினார்.
முன்னதாக, கண்ணன்டஅள்ளி ஊராட்சி அத்திகானூர் பெருமாள் கொட்டாய் பகுதிகளில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் அவசியம் குறித்து வீட்டு உரிமையாளர்களிடம்  எடுத்துரைத்தார். தொடர்ந்து களர்பதி கொத்தகோட்டை  கிராமத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
இதுகுறித்து ஆட்சியர் சி.கதிரவன் கூறியது: கிராமங்கள்தோறும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத  நிலையை உருவாக்க வீடுகள் தோறும் கழிப்பறைகள் கட்ட அரசு ரூ.12 ஆயிரம்  நிதியுதவி வழங்கி வருகிறது. ஊரக வளர்ச்சித் துறை சார்பில்  தனிநபர் கழிப்பறைகள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனைத்து வசதிகளும் வழங்குகிறது. திறந்தவெளி கழிப்பிடம் பயன் படுத்துவதன் மூலம் தொற்றுநோய் ஏற்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.  இரவு நேரங்களில் திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்துவதால் விஷ ஜந்துகள் தொல்லை  ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு, அரசின் நிதியைப் பயன்படுத்தி பொதுமக்கள் வீட்டுக்கு ஒரு  கழிப்பறை கட்டிக்கொள்ள வேண்டும். வரும் ஜன. 25-ஆம் தேதிக்குள் கழிப்பறைகள் இல்லாத வீடுகளில் கழிப்பறைகளை கட்டி இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள் அனைத்து கிராமங்களிலும்  கழிப்பறைகள் இல்லாத வீடுகளைக் கண்டறிந்து,  கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், ஆப்தாபேகம் ஒன்றிய பொறியாளர்கள் ஜமுனா, பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com