ஒசூர் அருகே கார்- அரசு பேருந்து மோதல்: 5 மாணவர்கள் உள்பட 6 பேர் பலி- 30 பேர் காயம்

ஒசூர் அருகே காரும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட  விபத்தில்,  4  பள்ளி  மாணவர்கள்,  கல்லூரி மாணவர், நடத்துனர் என 6 பேர் இறந்தனர். மேலும்,   30 பேர் காயம் அடைந்தனர். 

ஒசூர் அருகே காரும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட  விபத்தில்,  4  பள்ளி  மாணவர்கள்,  கல்லூரி மாணவர், நடத்துனர் என 6 பேர் இறந்தனர். மேலும்,   30 பேர் காயம் அடைந்தனர். 
பெங்களூரில் இருந்து வேலூர் மாவட்டத்துக்குள்பட்ட திருப்பத்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழ்நாடு  அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒசூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு,  சூளகிரியை நோக்கி சென்றது.  இதில்,  சுமார் 50 பேர் பயணம் செய்தனர்.
சூளகிரி பவர்கிரீடு அருகேயுள்ள குருபராத்பள்ளியில்  கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூரை நோக்கிச் சென்ற கார் சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது. இதையடுத்து,  எதிரே வந்த அரசுப் பேருந்தின் மீதும் பயங்கரமாக மோதியது.  இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கார் மீது ஏறி, தறிகெட்டு ஓடியது.  அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.
இதைத் தொடர்ந்து, சிறிது தூரத்தில் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.  விபத்தில் காரில் பயணித்த  ஒசூர் அப்பாவு நகரைச் சேர்ந்த சரவணபாபு மணீஷ் ( 21), சங்கர் மகன் சஞ்சய் (17), ஒசூர் டைட்டான் டவுன் ஷிப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்  மகன் ஆதர்ஷ் (16),  ஒசூர் ரயில் நிலையம் அருகில் வசிக்கும் கிருஷ்ணப்பா மகன் இசக்கியா (18), ஒசூர் சிப்காட் பேடரப்பள்ளியைச் சேர்ந்த மகேஷ்  மகன் ஆகாஷ் (18) ஆகிய 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும்,  பேருந்தின் டயர் சக்கரத்தில் சிக்கி தருமபுரியை அடுத்த ஏமகுட்டியூரைச் சேர்ந்த நடத்துநர் கோவிந்தராஜ் (55), பலத்த காயம் அடைந்து இறந்தார். 
தகவலின்பேரில்  போலீஸார் அங்கு சென்று விபத்தில் காயம் அடைந்திருந்த 30 பேரை கிருஷ்ணகிரி,  ஒசூர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும்,   பலியான 6 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து,  விபத்தில் சிக்கிய பேருந்தையும், காரையும் கிரேன்,  பொக்லைன் மூலமாக போலீஸார் அப்புறப்படுத்தினர். 
இறந்தவர்களில் 5 பேர் மாணவர்கள்: விபத்தில் பலியான மணீஷ் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ.வும்,  சஞ்சய், ஆதர்ஷ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் ஒசூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2-வும்,  இசக்கியப்பா ஒசூரில் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1-ம்  படித்து வந்தனர்.   காரை ஆகாஷ் ஓட்டிச் சென்றதும், மற்ற 4 பேர் அதில் பயணித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 
அமைச்சர் ஆறுதல்: இதைத் தொடர்ந்து,  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன்,  மக்களவை உறுப்பினர் கே.அசோக்குமார்,  வேப்பனப்பள்ளி எம்எல்ஏ  பி.முருகன்  உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.  மேலும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து  ஆறுதல் கூறினர்.
விபத்து தொடர்பாக டிஎஸ்பி (பொறுப்பு) ஆறுமுகம், சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com