ஒசூரில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்க கோரிக்கை

ஒசூரில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம்  ஒதுக்காவிடில்  நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என

ஒசூரில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம்  ஒதுக்காவிடில்  நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஒசூர் நகர தள்ளுவண்டி மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் கெளரவ தலைவருமான கே.ஏ. மனோகரன் தெரிவித்தார். 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
ஒசூர் நகராட்சி பேருந்து நிலையப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 560 சாலையோர மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தக் கடைகளினால் போக்குவரத்து மற்றும்  பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை. இவர்களில் 560 பேர் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டு, அதில் 260 பேருக்கு மட்டுமே புகைப்படத்துடன் அடையாள அட்டை ஒசூர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. மேலும், நகர வியாபாரக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக ஒசூர் பேருந்து நிலைய பகுதியில்  சாலையோர வியாபாரிகளை வியாபாரம் செய்ய விடாமல்,  அங்கிருந்து அகற்ற நகராட்சியினர் முயன்று வருகின்றனர்.  குறிப்பாக, நகராட்சி  அலுவலர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, குறிப்பிட்ட  அந்த அலுவலர்களை,  நகராட்சி ஆணையர் அறிவுறுத்தி, இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதைத் தடுத்த நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.
மேலும்,  சட்டத்தை மீறும் நகராட்சி அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபாரத்தைத் தொடர இன்னும் 1 வார காலத்துக்குள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில்,  நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார். அப்போது சங்க தலைவர் கணேசன், செய்தித் தொடர்பாளர் செல்வா, அமைப்பு சாரா சங்க மாவட்டப் பொதுச்செயலர் முத்தப்பா மற்றும் பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com