ஒட்டம்பட்டியில் தென்பெண்ணை ஆற்றைக் கடக்க பாலம் கட்டப்படுமா?

ஊத்தங்கரை அருகே ஒட்டம்பட்டியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பால கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்தங்கரை அருகே ஒட்டம்பட்டியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பால கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்தங்கரை வட்டம், புங்கனை ஊராட்சிக்கு உள்பட்ட ஒட்டம்பட்டி, பாப்பநாயக்கன்வலசை, பொன்னகரப்பட்டி,  கூத்தாடிப்பட்டி, வடுகப்பட்டி, வாதப்பட்டி, பழையகொங்கம், பகத்சிங் நகர் உள்ளிட்ட கிராமங்கள்  தென்பெண்ணை ஆற்றை
ஒட்டியுள்ளன. 
இந்தக் கிராமங்களில் சுமார் 1000 வீடுகளில் சுமார் 2,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை,  கல்வி, விவசாயப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இந்த தென்பெண்ணை
ஆற்றைக்கடந்து செல்லும் நிலை உள்ளது. 
ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இந்தப் பகுதி பெண்கள் பிரசவத்துக்காக அனுமன்தீர்த்தம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் வெள்ளப்பெருக்கு காலங்களில் சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.  இங்குள்ள குழந்தைகள் அனுமன்தீர்த்தம், ஊத்தங்கரை பள்ளிகளுக்கு ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படி செல்லும் போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் மாணவர்களின் புத்தகங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.  இதற்கு முன்பு வெள்ளப் பெருக்கின்போது ஆள்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். 
எனவே, இக்கிராம மாணவர்களின் கல்வி, பொதுமக்களின்   மருத்துவம் போன்ற அடிப்படை  தேவைகளை நிறைவு செய்ய  ஆற்றின் குறுக்கே மேம்பாலம்  கட்ட வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் புதூர்புங்கனை ஊராட்சி, ஒட்டம்பட்டி கிராம மக்கள் சார்பில் மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கக் கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மேலும், ஒட்டம்பட்டி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3 மாதங்களில் பணிகளை தொடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது. ஆனால் பாலம் கட்டும் பணி தொடங்கவில்லை என்று கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். 
தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். மழைக் காலங்களில் ஆற்றைக் கடக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  மேம்பாலம் அமைத்துத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com