தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை கிழித்து தொந்தரவு: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

காதலிக்க வலியுறுத்தி பிளஸ் 2 மாணவியின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை கிழித்து தொந்தரவு செய்ததால் மனமுடைந்த  மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

காதலிக்க வலியுறுத்தி பிளஸ் 2 மாணவியின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை கிழித்து தொந்தரவு செய்ததால் மனமுடைந்த  மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட  போச்சம்பள்ளியை  அடுத்த பண்ணந்தூர்  அருகேயுள்ள தேவிரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் தமிழரசி (17).  
அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2  கணிதப் பிரிவில் படித்து வந்த அவர்,  பிளஸ் 2  பொதுத்தேர்வு எழுதிவந்தார். இந்த  நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவர் இறந்தார்.
மாணவி தமிழரசி திங்கள்கிழமை காலை அகரம் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்குச் செல்வதற்குத் தயாராக இருந்தபோது  அவருடன் படித்துவந்த இருவர் காதலிக்க வலியுறுத்தியதாகவும்,  அங்கிருந்து அழுது கொண்டே வீட்டுக்கு வந்த தமிழரசி யாருடனும் பேசாமல் இருந்ததாகவும்,  அவரது தந்தை  விசாரித்தபோது,  தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை தன்னுடன் பயிலும் மாணவர்கள் இருவர் கிழித்ததாகக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவர் மீது   நடவடிக்கை எடுக்கக் கோரி  பாரூர் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாரூர் போலீஸார்  வழக்குப் பதிந்து, இருவரையும் போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  இதன்பின்னர், தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்கில் இருவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் உரியிரிழந்த மாணவியின் உறவினர்கள் திருப்பத்தூர்-தருமபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த பர்கூர் டி.எஸ்.பி. பாஸ்கரன், வன்கொடுமை தடுப்புத் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கூறியதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com