காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு: வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செயலர் சின்னப்பன், பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், கிருஷ்ணகிரி-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியது: மத்திய அரசின் பல்வேறு வரிகளால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக நிதி நிலை அறிக்கையில் வரிச் சலுகைகள் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மார்ச் 29-ஆம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால், டெல்டா பகுதி மாவட்டங்களில் முதல் கட்டமாக கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். மே 5-ஆம் தேதி நடைபெறும் வணிகர் தினத்தையொட்டி, சென்னையில் இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படும். இதில், மத்திய, மாநில அளவில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆனால், அப்பாவிகளான சிறு வியாபாரிகள் மீது வழக்குப் பதிந்தும், அபராதமும் வசூலிக்கப்படுகின்றன. இத்தகைய செயல்களை அலுவலர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com