சூளகிரி அருகே 33 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய திருவிழா

சூளகிரி அருகே 33 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நடத்திய ஸ்ரீதேவி உத்தம கரகம் சாக்கியம்மன் பல்லக்கு உற்சவம் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சூளகிரி அருகே 33 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நடத்திய ஸ்ரீதேவி உத்தம கரகம் சாக்கியம்மன் பல்லக்கு உற்சவம் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் செம்பரசனப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீதேவி உத்தம கரகம் சாக்கியம்மன் கோயில் திருவிழா கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை பச்சை கரகம், பல்லக்கு உற்சவ விழா தொடங்கியது.
இதில் செம்பரசனப்பள்ளி, மயிலேப்பள்ளி, பெத்தசிகரப்பள்ளி, எர்ணப்பள்ளி, கங்கசந்திரம் உள்ளிட்ட 33 கிராமங்களை சேர்ந்த மக்கள் பச்சை கரகம் எடுத்து வந்தனர்.
இவ்விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆதிதிராவிடர் மக்களின் பலகை கரகம், குரும்பர் இன மக்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான தலையில் தேங்காய் உடைத்தல் நடைபெற்றது. மேலும், 7 சுவாமிகளின் கலச ஆட்டம், பூக்கள் அலங்காரத்துடன் ஆராதனை செய்யப்பட்டது. 33 கிராமங்களில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். இரவில் வாண வேடிக்கையும், தேரோட்டமும் நடைபெற்றது.
முன்னதாக காலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அதிமுக மேற்கு ஒன்றிய செயலர் மது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இவ்விழாவில், 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 33 கிராம மக்களும், சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனால் சூளகிரி-பேரிகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com