வெவ்வேறு விபத்துகளில் 11 பேர் சாவு

சூளகிரி அருகே, சனிக்கிழமை கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கை குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.


சூளகிரி அருகே, சனிக்கிழமை கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கை குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல் வாடிப்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 4 பேரும், திண்டிவனம் அருகே விபத்தில் மூவரும் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஆஸ்டின் நகரைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(55). தனியார் கைக்கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுஜாதா டாரஸ் (48). இவர்களுக்கு நிகிதா(19), ஹரிஷ்மா ஏஞ்சல் (19) ஆகிய மகள்கள் உள்ளனர். வசந்தகுமார், தனது மனைவி, மகள்கள் மற்றும் அவரது மாமியார் மேரி வைலட் சரோஜா(65), மச்சான் ஜோசப் ராஜன்(40), தனது மனைவியின் அக்கா சலோமி அனிதா (50), அவரது மகள் கிலிண்டா எலிசபெத் (27), அவரது 6 மாதக் குழந்தை ஜோனதான் ஆகியோருடன் ஒரு காரில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள நாகமங்கலத்தை அடுத்துள்ள ஒரு தேவாலயத்துக்கு சனிக்கிழமை வந்தனர்.
காரை வசந்தகுமார் ஓட்டிச் சென்றார். அவர்கள், நாகமங்கலத்துக்குச் செல்லாமல் வழி தவறி ஒசூர் அருகே உள்ள கோபசந்திரம் பகுதிக்கு கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். இந்த நிலையில், தவறான பாதையில் செல்வதை உணர்ந்த வசந்தகுமார், கோபசந்திரத்தில் காரை நிறுத்தி, நாகமங்கலத்துக்குச் செல்ல வழி கேட்டுள்ளார். அங்குள்ள ஒரு வளைவில் காரை திருப்ப முயன்றார்.
அப்போது, கர்நாடக மாநிலம், பெல்லாரியிலிருந்து, திருப்பூர் மாவட்டம் காங்கயம் நோக்கி நெல் மூட்டை பாரம் ஏற்றிய லாரி, கார் மீது மோதியது. இந்த விபத்தில் வசந்தகுமாரின் மனைவி சுஜாதா டாரஸ், அவரது மகள் ஹரிஷ்மா ஏஞ்சல், மனைவியின் அக்கா சலோமி அனிதா, மாமியார் மேரி வைலட் சரோஜா ஆகிய 4 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
வசந்தகுமார், அவரது மச்சான் ராஜன், மகள் நிகிதா, கிலிண்டா எலிசபெத், 6 மாதக் குழந்தை ஜோனதான் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சடலங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாடிப்பட்டி அருகே குழந்தை உள்பட 4 பேர் சாவு: வாடிப்பட்டி அருகே உள்ள வடுகபட்டி பகவதிஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தன். இவரது மனைவி மறத்தி (66), மகள் லட்சுமி (45) மற்றும் பேத்தி வசந்தி (22). வசந்தியின் மகன் ஆத்விக் என்ற 7 மாதக் குழந்தைக்கு கடந்த சில நாள்களாகக் காய்ச்சல் இருந்ததால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்வதற்காக நான்குவழிச் சாலையில் வடுகபட்டி பேருந்து நிறுத்தத்தில் இவர்கள் நின்றிருந்துள்ளனர்.
அப்போது, அவ்வழியே திண்டுக்கல் நோக்கிச் சென்ற காரின் முன்பக்க இடதுபுற டயர் பஞ்சரானதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் குழந்தையுடன் நின்றிருந்த மறத்தி உள்ளிட்டோர் மீது மோதியது. இதில், 4 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், மறத்தி, லட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதையடுத்து, அப்பகுதியினர் ஓடி வந்து பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய வசந்தி, குழந்தை ஆத்விக் ஆகிய இருவரையும் மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விபத்துக்குக் காரணமான கார் சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்தது. காரை ஓட்டி வந்த கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையைச் சேர்ந்த முருகேசன் (51), இவரது மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
வாடிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், காரை ஓட்டி வந்த முருகேசனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அருகே விபத்தில் மூவர் பலி: சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (29). சென்னை திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பணிபுரிபவர் ஜான்சன் சாமுவேல் (29. இவர்கள் இருவரும் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு, சென்னை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை குன்றத்தூரைச் சேர்ந்த அருண்குமார் (24) ஓட்டினார். சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் திண்டிவனத்தை அடுத்த சாரம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், காரில் வந்த விஜயகுமார், அவரது மனைவி சபரி (25), மாமியார் ராமலட்சுமி (46) ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஜான்சன் சாமுவேல், அவரது மனைவி வின்சி (28), கார் ஓட்டுநர் அருண்குமார் ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் விஜயகுமாரின் 10 மாத பெண் குழந்தை நானி காயமின்றி உயிர் தப்பியது. தகவல் அறிந்த திண்டிவனம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.வி.திருமால் தலைமையிலான போலீஸார் சடலங்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com