"அரசியல் வரலாற்றில் மொழி ஆற்றலை பயன்படுத்தியவர் கருணாநிதி'

அரசியல் வரலாற்றில் மொழி ஆற்றலைப் பயன்படுத்தியவர் கருணாநிதி என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் புகழஞ்சலி செலுத்தினர்.

அரசியல் வரலாற்றில் மொழி ஆற்றலைப் பயன்படுத்தியவர் கருணாநிதி என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் புகழஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். 
இதில் கவிஞர் நந்தலாலா பேசியது: கருணாநிதி  மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் படித்திருக்கவே முடியாது. மதங்களின் தடைகளை உடைத்து  பெண்களுக்கு நாற்காலியை வழங்கியது பெரியாரும், அண்ணாவும்,  கருணாநிதியும் என்பதை மறந்துவிட வேண்டாம். திரைப்படத் துறையில் கதாநாயகனைக் காட்டிலும் திரைக்கதை எழுதியதற்காக அதிக சம்பளம் வாங்கியவர் கருணாநிதி. சிறுகதை, கவிதை, செய்தி,  திரைக்கதை என பல திறமைகளை கொண்டிருந்தவர்.  அவர் வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல,  பூம்புகார்,  தொல்காப்பியம்,  குறளோவியம், ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர் என பல காவியங்களை படைத்துள்ளார். அரசியல் வரலாற்றில் மொழி ஆற்றலைப் பயன்படுத்திய தலைவர்களில் கருணாநிதி மட்டுமே என்றார். 
பேராசிரியர் சபாபதிமோகன் பேசியது: அரை நூற்றாண்டுகளாக தி.மு.க.வை கட்டிக்காத்த  ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. மற்ற மாநிலங்களில் ஏட்டளவில் உள்ள சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை,  அவர் தமிழகத்தில் சட்டமாகக் கொண்டு வந்தார். சட்டப் பேரவையை நடத்த அவரின் புன்னகையே போதும்.  அவ்வளவு சக்தி வாய்ந்தது அவருடைய புன்னகை. எதிரிகளை கலங்க வைத்த ஒரு தலைவர் கருணாநிதி. அண்ணாவால் வியர்ந்து பார்க்கப்பட்ட ஒரே தலைவர் கருணாநிதி என்றார். 
பேராசிரியர்  அப்துல் காதர் பேசியது:  கருணாநிதி ஒரு சிறந்த போராளி. 14 வயது முதல் தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் போராடி வெற்றி பெற்றவர் என்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்டச் செயலாளர் இ.ஜி.சுகவனம், மாநில மகளிர் அணித் தலைவர் காஞ்சனா கமலநாதன், தருமபுரி மாவட்ட திமுக செயலாளர் தடகம் சுப்பிரமணி எம்.எல்.ஏ., வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com