கிடப்பில் போடப்பட்ட நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் மலைப் பாதை

நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பெருமாளைத் தரிசிக்க செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிடப்பில் போடப்பட்ட நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் மலைப் பாதை

நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பெருமாளைத் தரிசிக்க செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகே நைனாமலை உள்ளது. இங்கு 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் கோயில் பல்லவ மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கோயிலின் சில பகுதிகள் திருமலை நாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகளும் உள்ளன.
 அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக 3,360 படிகளைக் கடந்து சென்றால் மட்டுமே நின்ற நிலையிலுள்ள குவலயவல்லி தாயார் சமேத வரதராஜப் பெருமாளைத் தரிசிக்க முடியும்.

 இத்தகைய சிறப்பு மிக்க இந்தப் பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

 பக்தர்களின் வசதிக்காக நைனாமலையின் உச்சிக்கு வாகனங்கள் சென்று வரும் வகையில் ரூ.3 கோடி மதிப்பில் 4.7 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் இந்து சமய அற நிலையத் துறை ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்ததுடன், மீதித் தொகையைப் பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெற்று சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

 கோயில் வரை மலையைச் சரித்து பாதை உருவாக்கப்பட்டதோடு, பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக எந்தப் பணியும் இங்கு நடக்கவில்லை. இதனால் பக்தர்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.
 இதுகுறித்து சேந்தமங்கலத்தைச் சேர்ந்த வி.ராமகிருஷ்ணன் கூறியது: நைனாமலை உச்சியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக மட்டுமே நடந்து செல்ல வேண்டும். படிக்கட்டுகள் செங்குத்தாக உள்ளதால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே, மலை உச்சிக்கு வாகனத்தில் சென்று வரும் வகையில், சாலை அமைக்கும் பணி 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 இந்தப் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. கோயில் திருப்பணிக் குழு கலைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகிறது. இதனால் இப் பணியை முன்னெடுத்துச் செல்ல வழி இல்லாமல் பெருமாள் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் என்றார்.

 இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியது: நைனாமலைக்கு சாலை அமைக்கும் பணி மிகப் பெரிய பணி என்பதால், தாமதமாகிறது.

 இப்போதுள்ள நிலையில் மலையிலுள்ள பாறைகளை வெட்டி மண் சாலை அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.


 இந்தப் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு பாலங்கள், தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். அதன்பிறகு தார்ச்சாலை அமைக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இப் பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி தேவை என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, சுற்றுலா வளர்ச்சித் திட்டம் மூலம் நிதி பெற மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன், பணிகள் தொடங்கப்படும் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com