மாட்டுத் தீவனம் விலை உயர்வு; பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

உற்பத்தி செலவுக்கு ஏற்றவாறு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர்.

உற்பத்தி செலவுக்கு ஏற்றவாறு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர்.
 மாவட்ட அளவிலான பால் உற்பத்தியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சேலம் ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, பொதுமேலாளர் எஸ்.சங்கீதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பி. பாலமுருகன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதில் பங்கேற்ற பால் உற்பத்தியாளர்கள் விடுத்த கோரிக்கை விவரம்:
 எம்.ஜி.ராஜேந்திரன்: தீவன விலை உயர்வால் பால் உற்பத்தி செலவு லிட்டருக்கு ரூ. 44 வரை அதிகரித்துள்ளது. இதனால் பசும்பால் லிட்டருக்கு ரூ. 27இல் இருந்து ரூ. 37 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 29-இல் இருந்து ரூ. 45-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
 சுந்தரம்: பால் விலை நிர்ணயத்தில் கொழுப்பு சத்து 4 என்ற அளவுக்கு கீழும், இதர தாது சத்துகள் 8 என்ற அளவுக்கு கீழும் 1 பாயின்ட் குறைந்தால் கூட ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக ரூ. 6 மட்டுமே ஆவின் நிர்வாகம் வழங்குகிறது. சத்துக் குறைவுக்கு ஏற்றபடி பால் விலையைக் குறைப்பதில் தவறில்லை, அதே சமயத்தில் லிட்டருக்கு ரூ. 20 வரை குறைத்தால் பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த நடைமுறையை ஆவின் நிர்வாகம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
 சுப்பிரமணி: கால்நடை மருந்தகங்களில் மருத்துவர்கள் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இருக்கின்றனர், மாலையில் மருந்தகங்களுக்கு வருவதில்லை. இதனால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவர்களை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 ஆவின் நிறுவனம் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொள்முதல் செய்து வழங்கப்படும் மாட்டுத்தீவனம் தரமானதாக இல்லை. இந்த மாட்டுத் தீவனத்தால் எந்தப் பலனும் இல்லை. இதனால், ஆவின் நிர்வாகம் நேரடியாக மாட்டு தீவனத்தைத் தயாரித்து பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
 சரவணன்: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் பால் பணத்தை 10 நாள்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்ய வேண்டும். இப்போது ஒரு மாதம் வரை பால் பணம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆவின் நிர்வாகம் இந்திய நாட்டு மாடு இனங்களான சிந்து, கிர் உள்ளிட்ட சினை ஊசிகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
 இந்திய நாட்டு மாடு இனங்கள் பால் சத்தானதாக இருக்கும் என்பதால் இத்தகைய மாட்டு இனங்கள் தமிழகத்தில் அதிகரிக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
 நடேசன்: நாட்டு மாட்டு பால் வெளிச்சந்தையில் லிட்டர் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு மாட்டு பாலை தனியாக கொள்முதல் செய்ய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் மூலம் அவசர மற்றும் வாராந்திர சிகிச்சைக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கால்நடை மருத்துவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.
 மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம்: பால் விலை உயர்வு குறித்த கோரிக்கையை சங்கங்கள் தீர்மானமாக அளித்தால் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து அரசின் கவனத்துக்கு அனுப்பி வைக்கும். மாட்டுத் தீவனத்தை ஆவின் நிர்வாகம் தயாரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்களில் மாலை நேரத்திலும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என சம்பந்தபட்ட துறை அதிகாரிக்கு உத்தரவிடப்படும் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com