கொடி நாள் வசூலில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற வேண்டும்: எஸ்.பி. வேண்டுகோள்

கொடி நாள் வசூலில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற வேண்டும். இதற்காக பொதுமக்கள் நிதி வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு வேண்டுகோள் விடுத்தார்.

கொடி நாள் வசூலில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற வேண்டும். இதற்காக பொதுமக்கள் நிதி வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு வேண்டுகோள் விடுத்தார்.
 நாமக்கல் மணிக்கூண்டு அருகே கொடிநாள் நிதி வசூல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:
 முப்படை வீரர்களின் மகத்தான சேவையை நினைவு கூரும் வகையில், முப்படையினர் கொடி நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டுக்கு சேவை செய்ய இளம் ஆண், பெண்களை ராணுவத்துக்கு அனுப்பி வைக்கும் உன்னதமான மரபை தமிழகம் கொண்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் வீரத்தை விதைத்து, ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
 நாட்டைப் பாதுகாக்கச் செல்லும் வீரர்களின் குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதும், போரில் மரணமடைந்த வீரர்களின் வாரிசுகள், குடும்பத்தினருக்கு உதவி செய்வதும், படைப் பணியிலிருந்து விடுவிக்கப்படும் ராணுவ வீரருக்கு மறுவேலைவாய்ப்பு அளிப்பதும் அனைவரின் கடமை. இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழக மக்கள் அனைவரின் பங்களிப்பு மிகவும் அவசியம். முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்ற படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு முன்னாள் படைவீரர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்களுக்காக, கொடி நாளில் திரட்டப்படும் நன்கொடைகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் கொடி நாள் வசூல் இலக்கைத் தாண்டி நாமக்கல் மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். நிகழாண்டில் கொடிநாள் நிதி வசூலில் நாமக்கல் மாவட்டம் முன்னிலை வகிக்க வேண்டும் என்றார். இதில் ஆயுதபடை டிஎஸ்பி (பொறுப்பு) மணிமாறன், நாமக்கல் காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார், ஊர்க்காவல் படை வட்டார துணை கமாண்டர் விஜயகுமார், எஸ்.ஐ. சபாபதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பங்கேற்றனர். ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் கொடிநாள் நிதி வசூல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com