டிசம்பர் 17-இல் கலைப் போட்டிகள்: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப் போட்டிகள் நாமக்கல்லில் டிசம்பர் 17-இல் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப் போட்டிகள் நாமக்கல்லில் டிசம்பர் 17-இல் நடைபெறுகிறது. இதில், 6ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறை கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நாமக்கல் நகராட்சி கோட்டை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஜூனியர் பிரிவாகவும், 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை சீனியர் பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும்.
 காலை 10 மணிக்கு ஓவியப் போட்டி நடைபெறும். ஓவியத் தாள், வண்ணங்கள், பிரஸ்கள் உட்பட தேவையான பொருள்களை போட்டியாளர்களே கொண்டு வரவேண்டும். தலைப்புகள் போட்டிகள் தொடங்கும்போது, அறிவிக்கப்படும். பகல் 2 மணிக்கு பாட்டுப் போட்டி, பரதநாட்டிய போட்டி, கிராமிய நடனப் போட்டி ஆகியன நடைபெறும்.
 பாட்டுப் போட்டியில் முறையாக கர்நாடக இசை படிக்கும் சிறுவர்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்களைப் பாட வேண்டும். பரதநாட்டியப் போட்டியில் அதிகபட்சம் 5 நிமிடம் நடனமாட அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் போட்டியிலும் கிராமிய நடனப் போட்டியிலும் திரைப்பட பாடல்களுக்கான நடனம், குழு நடனத்துக்கு அனுமதி இல்லை.
 கிராமிய நடனத்தில் முறையான கரகம், காவடி, பொய்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்களாக இருக்க வேண்டும். பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
 முதல் பரிசு பெறும் சிறுவர்கள் அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற அலுவலகத்தை 04286-285455 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது திட்ட அலுவலரை 94432 24921 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com