மாரடைப்பு: இளைஞர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்

26 வயது இளைஞர் ஒருவர் மாரடைப்பு வந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் எந்த வயதினராக இருந்தாலும், மாரடைப்பு அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்
மாரடைப்பு: இளைஞர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்

26 வயது இளைஞர் ஒருவர் மாரடைப்பு வந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் எந்த வயதினராக இருந்தாலும், மாரடைப்பு அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர். தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டயப் படிப்பு பயின்று வருகிறார். அவருக்கு திடீரென்று அண்மையில் நெஞ்சுவலி ஏற்பட்டது.
 அவரை சிகிச்சைக்காக விவேகானந்தா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவமனையின் பொது மருத்துவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.அர்த்தநாரீஸ்வரன் இசிஜி பரிசோதனை செய்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தார்.
 இதையடுத்து இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் பி.ரகுபதி, உடனடியாக நோயாளிக்கு எக்கோகார்டியோகிராம் பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு இருதயத்தின் முக்கியமான பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
 நோயாளியின் இளம் வயது மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு மணி நேரமே ஆன காரணத்தை கருத்தில் கொண்டு அவருக்கு உடனடியாக ஆஞ்சியோகிராம் எனப்படும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது இதில் அவருக்கு இதயத்தில் செல்லும் முக்கியமான ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
 இதை அடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் சிகிச்சை மூலம் அவரது ரத்த நாளத்தில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. அதனை அடுத்து அவருக்கு நெஞ்சு வலி நீங்கி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
 சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர் பி.ரகுபதி கூறியது: சாதாரணமாக சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகம், புகை பிடித்தல், மது அருந்துதல் அல்லது குடும்பத்தில் வேறு யாருக்கேனும் மாரடைப்பு இருத்தல் போன்றவை உள்ளபோது மாரடைப்பு வர அதிகம் வாய்ப்புள்ளது.
 ஆனால் இந்த இளைஞருக்கு வேறு எந்த ஆபத்தான காரணிகள் இல்லாத நிலையில் மாரடைப்பு வந்துள்ளதை பார்க்கும்போது, இந்த வயதிலும் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது எனத் தெரியவருகிறது.
 எனவே மாரடைப்பின் அறிகுறிகள் அறியப்பட்டால் உடனடியாக அதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுவது உயிர் காக்கும்.
 மேலும் எவ்வளவு விரைவாக, கால தாமதம் இல்லாமல் சிகிச்சை கிடைக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் இருதயம் செயல்பாடு இழப்பதைக் கட்டுப்படுத்தலாம். மாரடைப்புக்கான மருத்துவத்தில் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com