புறவழிச் சாலை திட்டப் பணியில் சுணக்கம்: போக்குவரத்து நெரிசல் சிக்கித் தவிக்கும் நாமக்கல் நகரம்

நாமக்கல் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.10 கோடி மதிப்பில் புறவழிச்சாலை (ரிங் ரோடு) அமைக்கப்படும் என

நாமக்கல் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.10 கோடி மதிப்பில் புறவழிச்சாலை (ரிங் ரோடு) அமைக்கப்படும் என கடந்த 5 ஆண்டுகளுக்க முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 நிலம் அளவீடு செய்யும் பணிகள் ஓராண்டுக்கு முன்னரே முடிவடைந்த நிலையில், பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 தினமும் 700 பேருந்துகள்: நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்துக்குள் நாள்தோறும் 700-க்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்கின்றன. குறிப்பாக, திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் நாமக்கல் பேருந்து நிலையத்தில் நுழைந்து வெளியேறுகின்றன.
 இப் பேருந்துகள் மற்றும் நாமக்கல் நகரத்தினுள் நுழைந்து செல்லும் மணல் லாரிகள் உள்ளிட்ட பல்வேறு சரக்குப் போக்குவரத்து வாகனங்களால் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வருகிறது. அதனால், விபத்து அபாயமும் நிலவி வருகிறது.
 புறவழிச் சாலை அறிவிப்பு: இப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் பேருந்து நிலையத்தை
 இடமாற்றம் செய்ய வேண்டும். அதேவேளையில், மணல் லாரி உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் நகரைச் சுற்றிச் செல்லும் வகையில் புறவழிச் சாலை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும் என, நாமக்கல் நகர மக்கள், தன்னார்வலர்கள், பல்வேறு சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்பலனாக, கடந்த 2012ஆம் ஆண்டு புறவழிச்சாலை அமைக்க அரசு அனுமதியளித்தது. மேலும், ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவிப்பு
 வெளியிடப்பட்டது.
 அதையடுத்து, புறவழிச் சாலை அமைக்கப்படும் இடமும் உடனடியாக தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, முதலைப்பட்டி புறவழிச் சாலை அருகே துவங்கும் புறவழிச் சாலை, மரூர்பட்டி, விட்டமநாயக்கன்பட்டி, வீசாணம், வேட்டாம்பாடி, சிவியாம்பாளையம், வேட்டாம்பாடி, கூலிப்பட்டி, வேப்பனம், வசந்தபுரம், கணவாய்பட்டி, தண்ணீர்பந்தல், தொட்டிப்பட்டி என, 22 கி.மீ. தூரத்துக்கு புறவழிச் சாலை அமைக்க முடிவு
 செய்யப்பட்டது.
 நிலம் அளவீடு பணி நிறைவு: அதற்காக வருவாய் துறையில் நாமக்கல் புறவழிச் சாலை நில எடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு, வட்டாட்சியர் தலைமையில் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், திட்டம் அறிவித்து 5 ஆண்டுகளாகி விட்டன. நில அளவீடு செய்யும் பணியும் ஓராண்டுக்கு முன்னரே முடிந்துவிட்டது. ஆனால், திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை.
 திருச்சியில் இருந்து சேலம், ஈரோடு, போன்ற பெரு நகரங்களுக்குச் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் இப்போது நாமக்கல் நகருக்குள் வந்துதான் செல்கின்றன. இதனால் நாமக்கல் நகர மக்கள், கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுற்றுவட்டச் சாலை பணியை விரைந்து தொடங்கவும், அதுவரை கனரக வாகனங்கள் பகல் நேரத்தில் நாமக்கல் நகருக்குள் நுழைவதை முழுமையாகத் தடுக்கவும் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com