நாளை திறன்பயிற்சி பெயர் பதிவு முகாம்
By நாமக்கல், | Published on : 20th June 2017 09:42 AM | அ+அ அ- |
இலவச திறன்பயிற்சிக்கான பெயர் பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 21) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகிய கால இலவச திறன்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கு பின், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, வங்கி நிதி சேவை மற்றும் காப்பீடு திறன்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் பயிற்சியாளர்கள், தங்களது பெயர்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் புதன்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி 40 நாள்கள் அளிக்கப்படும். அதற்கான வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். பிளஸ் 2, பட்டப்படிப்பு கல்வித்தகுதி உடைய ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற விரும்புவோர், புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்று மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் நேரில் வந்து சிறப்பு திறன்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளலாம்.