24 கோடி பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்

இந்தியாவில் 24 கோடி பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்றார் மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இந்தியாவில் 24 கோடி பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்றார் மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
 சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், நாமக்கல்லில் மத்திய அரசின் 3 ஆண்டு காலச் சாதனைகள் குறித்த விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
 இதில், மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியது: கடந்த 2014-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 4 கோடி வங்கிக் கணக்குகள் மட்டுமே இருந்தன. பிரதமரின் ஜன்தன் திட்டம் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 29 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ரூ.65,000 கோடி அளவுக்கு பாமர மக்களின் சேமிப்பு உள்ளது.
 உலகத்திலேயே அதிக விபத்து நிகழும் நாடாக இந்தியா உள்ளது. இங்கு ஓராண்டில் மட்டும் 5 லட்சம் விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 1.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 16 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்களே அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தான் பிரதமர் நரேந்திர மோடி விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன்படி, ஆண்டுக்கு ரூ.12 பிரீமிய கட்டணமாகச் செலுத்தினால் போதும் ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும். இதேபோல, ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.330 செலுத்தினால், ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும்.
 இந்தியாவில் இதுவரை விபத்து காப்பீடுத் திட்டத்தில் 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 65.87 லட்சம் பேர் இணைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 1.75 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
 இந்தியாவில் 24 கோடி பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் 23 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் இதுவரை 7 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர். ரூ.4 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
 பாஜக ஆட்சி பெறுப்பேற்கும் முன் 18,500 கிராமங்களில் மின்சார வசதி இல்லாமல் இருப்பது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவற்றில் 14,000 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி இருந்தால், விவசாயிகளின் தற்கொலையை தடுத்து இருக்கலாம். மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ரூ.45,035 கோடி நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு இதுவரை ரூ.57,503 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு ஓராண்டுக்குள் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 நாமக்கல் மாவட்டத்தில் 4.21 லட்சம் வீடுகளில் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. 78,000 வீடுகளில் இணைப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதில் 9,000 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றார். இந்தக் கூட்டத்தில், நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், பாஜக நிர்வாகி முருகேசன் ஆகியோர் பேசினர். சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்களுக்கு அமைச்சர் மரக்கன்றுகள் வழங்கி, ஏழைப் பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
 சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிதி பிரிவு இயக்குநர் கிருஷ்ண பிரசாத் வரவேற்றுப் பேசினார். நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com