மோகனூரில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: கடையடைப்பு, உண்ணாவிரதம்

மோகனூரில் மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் புதன்கிழமை நடைபெற்றது.

மோகனூரில் மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் குவாரி அமைந்துள்ள பகுதியில் நாமக்கல் நகராட்சி, மோகனூர், சீராப்பள்ளி, பட்டணம் ஆகிய பேரூராட்சிகளின் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. அதுபோல் இப் பகுதியில் இருந்து ஒருவந்தூர், குமரிபாளையம், அரசநத்தம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். அதுபோல் மோகனூர், காட்டுப்புத்தூர் பகுதியில் 25,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதியின்றி காய்ந்து வானம் பார்த்த பூமியாய் மாறிவிடும். எனவே, ஒருவந்தூர் மணல் குவாரி அனுமதியை ரத்து செய்து மூட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
எனினும் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதை எதிர்த்தும், மணல் குவாரியை மூட வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், நீரேற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேரில் சந்தித்து பிரச்னை குறித்து விளக்கிக் கூறினர். எனினும் பலன் எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து, புதன்கிழமை ஒருவந்தூர் மணல் குவாரியை மூட வலியுறுத்தி மோகனூரில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவிரி மீட்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் செல்ல.ராசாமணி தலைமை வகித்துப் பேசினார். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் பெ.நவலடி வரவேற்றார்.
திமுக மாநில விவசாய அணி செயலரான முன்னாள் அமைச்சர் எம்.சின்னுசாமி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பார். இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தை தொடக்கி வைத்தனர். கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் மத்திய இணையமைச்சர் எஸ்.காந்திச்செல்வன், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம்.ஷேக் நவீத், இந்திய விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் கே.வாசு சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.
இதில் நீரேற்றுப் பாசன சங்க விவசாயிகள், திமுக, கொமதேக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மோகனூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஒருவந்தூர் மணல் குவாரியை மூட வலியுறுத்தி மோகனூர் பகுதி முழுவதும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இதனால் மோகனூரின் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com