குறைந்த நீரில் பசுந்தீவனம் வளர்ப்புத் தொழில்நுட்பம்: விவசாயிகள் அறிந்துகொள்ள ஆட்சியர் வேண்டுகோள்

குறைந்த நீரில் பசுந்தீவனம் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்

குறைந்த நீரில் பசுந்தீவனம் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம்.நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கான கால்நடை தீவனம் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் வறட்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
 முகாமுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேசியது:
 நாமக்கல் மாவட்டத்தில் ஏறக்குறைய 3.50 லட்சம் கால்நடைகள் உள்ளன. தற்போது வறட்சியின் காரணமாக கால்நடைகளை வளர்ப்பதற்கு அரசே கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களில் செயல்படுத்தி வருவதோடு, கால்நடைகளுக்குத் தேவையான உலர் தீவனங்களை மானிய விலையில் கிலோ ரூ. 2-க்கு விற்பனை செய்து வருகிறது.
 கால்நடைகளுக்கு என்ன தான் உலர் தீவனங்கள் கொடுத்தாலும் பசுந்தீவனங்கள் கொடுப்பதன் மூலமே பால் உற்பத்தி அதிகம் கிடைக்கிறது. எனவேதான் பசுந்தீவன உற்பத்திக்கு வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு குறைந்த அளவு நீரில் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன முறையில் ஒரு கிலோ விதையின் மூலம் சுமார் 7-8 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.
 அதைத்தொடர்ந்து தோட்டக்கலைத் துறை வல்லுநர் சி.சர்மிளா பாரதி, மா பயிரில் நீர் மேலாண்மை முறைகளான மண்பானை மூலம் நீர் பாய்ச்சுதல், உபயோகமற்ற பிளாஸ்டிக் நீர்க்குடுவைகள், குளுக்கோஸ் பாட்டில்கள், பி.வி.சி.பைப்கள் மூலம் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் முறை குறித்துச் செயல் விளக்க முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
 பின்னர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அசோலா வளர்ப்பு செயல் விளக்க திடல்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தீவன வளர்ப்பு முறை செயல் விளக்க திடல்களையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
 மேலும் தீவனப்பயிர் உற்பத்தி, ஆடு, மீன், நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரித்தல் உள்ளிட்ட செயல்விளக்க திடல்களை பார்வையிட்ட ஆட்சியர், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து குறைந்த செலவில் அதிக வருமானம் பெற வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.
 குறைந்த செலவில் பசுந்தீவனங்கள் உற்பத்தி தொழில் நுட்பத்துக்கான துண்டுப் பிரசுரங்களையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.
 வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா திட்ட விளக்கவுரையாற்றினார். உதவிப் பேராசிரியர செ.அழகுதுரை, பூச்சியல் துறை வல்லுநர் சி.சங்கர், கால்நடைத்துறை வல்லுநர் ம.ஜோதிலட்சுமி, மீன்வளத்துறை அலுவலர் சி.பால்பாண்டி, மண்வளத்துறை வல்லுநர் சு.சத்யா, துணை இயக்குநர் எம்.பிச்சை, உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு எஸ்.சின்னுசாமி, தோட்டக்கலை துணை இயக்குநர் எம்.சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக வேளாண் அலுவலர் டி.அன்புச்செல்வி, எருமப்பட்டி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கால்நடை பராமரித்துறை மண்டல இணை இயக்குநர் சீனிவாசன் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com