இயல்பைவிட 100 சதவீதம் கூடுதல் மழை: 10 சத ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன

தென்மேற்குப் பருவமழை இயல்பைக் காட்டிலும் 100 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளபோதிலும், நாமக்கல் மாவட்டத்தில் 10 சதவீத ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

தென்மேற்குப் பருவமழை இயல்பைக் காட்டிலும் 100 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளபோதிலும், நாமக்கல் மாவட்டத்தில் 10 சதவீத ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்து போனதால், கடும் வறட்சி நிலவியது. நிகழாண்டு தொடக்கத்தில் பெரிய அளவில் மழை இல்லை. இருப்பினும், கடந்த 3 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழையைப் பொருத்த வரையில் 303 மி.மீ. மழை இயல்பாகக் கிடைக்கும். ஆனால், நிகழாண்டு 615 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான குளம், குட்டைகள் நிரம்பின.
இருப்பினும், 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் உள்ள பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 79 ஏரிகளில் வெண்ணந்தூர் அருகே உள்ள சேமூர் பெரிய ஏரி, மின்னக்கல் ஏரி, மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, பாலமேடு சின்ன ஏரி, இலுப்புலி ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, வரகூர் ஏரி, செருக்கலை ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி என 9 ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளன. 10 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் தேங்கி இருந்தாலும், சுமார் 60 ஏரிகளில் மிகவும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது.
மாவட்டத்திலேயே பெரிய ஏரி என்று அழைக்கப்படும் தூசூர் ஏரியில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தூசூர் ஏரியில் இருந்து பாசன வசதி பெறும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகப் பெய்தாலும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் 9 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மீதமுள்ள 70 ஏரிகள் இதுவரை நிரம்பவில்லை.
இதற்கு கனமழை பெய்யாதது ஒரு காரணமாக இருந்தாலும், ஏரிகளுக்கு நீர் வரும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாதது மற்றொரு காரணமாக உள்ளது. எனவே, நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி வடகிழக்குப் பருவமழையின்போது கிடைக்கப் பெறும் தண்ணீரைச் சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com