காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: முன்னாள் படைவீரர்கள் வலியுறுத்தல்
By DIN | Published on : 14th November 2017 08:58 AM | அ+அ அ- |
காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சங்கத்தின் தலைவர் பழனியப்பன் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் 9 தடுப்பணைகள் கட்டப்பட்டன. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த யாரும் தடுப்பணை கட்ட ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சியை சந்திக்க நேரிட்டது.
இந்தநிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக பேசாதது ஏமாற்றம் அளித்தது.
எனவே, இனியாவது காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில் சங்க செயலர் வரதராஜன், பொருளாளர் வீரப்பன், துணைத் தலைவர்கள் காளியப்பன், கருமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.