மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கும் திட்டத்தில் நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ. 1.30 கோடி மானியத் தொகை

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கும் திட்டத்தில் நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ. 1.30 கோடி மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் 8 குதிரை திறன் முதல் 70 குதிரைத் திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர்டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசைக் களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் முதலான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் வாங்கிக் கொள்ள விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கு நிகழாண்டில் ரூ.1.34 கோடி மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாகப் பெற்றுக் கொள்ள இயலாததைக் கருத்தில் கொண்டு அவற்றை குறைந்த வாடகையில் பெற்றிட ஏதுவாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்கவும் மானிய உதவி வழங்கப்படுகிறது.
இதன்படி, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விரும்பும் குழுக்களோ அல்லது தொழில் முனைவோரோ, ரூ. 25 லட்சம் மதிப்புடைய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி வாடகை மையங்கள் அமைக்க முன் வந்தால் அவர்களுக்கு 40 சதவிகித மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
நடப்பு நிதி ஆண்டில் நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ. 1.30 கோடி மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உபயோகம் குறைவாக உள்ள கிராமங்களில் கிராம அளவிலான குழுக்கள் ரூ. 10 லட்சத்திற்கு குறையாத மதிப்புடைய பண்ணை இயந்திரங்களை வாங்கி, வாடகை மையங்கள் நடத்தலாம்.  இதனை விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றவை மேற்கொள்ளலாம்.
இந்தத் திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள், விவசாய குழுக்கள், தொழில் முனைவோர், மாவட்ட செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அல்லது சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுலகங்களை 04286-275013(நாமக்கல்),  04288-283517(திருச்செங்கோடு) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com