ஜாதிச் சான்றிதழ்: எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் வலியுறுத்தல்

ஜாதிச் சான்றிதழ் பெற்றுத்தர நடவடிக்கையெடுக்க வேண்டும் என கிராம மக்கள் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரனிடம் வலியுறுத்தினர்.

ஜாதிச் சான்றிதழ் பெற்றுத்தர நடவடிக்கையெடுக்க வேண்டும் என கிராம மக்கள் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரனிடம் வலியுறுத்தினர்.
 சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன், ஒரு நாளைக்கு ஒரு ஊராட்சி என்ற அடிப்படையில் தினமும் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார்.
 அதன்படி, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையபட்டி ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் புதன்கிழமை மக்கள் குறை கேட்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
 வளையபட்டி அருகே ரெட்டையாம்பட்டி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இங்கு சுமார் 200 பேர் ஜாதிச் சான்றிதழ் கோரி நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து மனு அளித்தும், இதுவரை ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும் கிராம மக்கள் முறையிட்டனர்.
 இதையடுத்து, உடனடியாக வட்டாட்சியரை தொடர்புகொண்ட எம்.எல்.ஏ. ஜாதிச் சான்றிதழ் கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
 இதுபோல் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தரப்படும் என்றும், இன்னும் 10 நாள்களில் இந்த பணி தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும், கிராமத்தின் தெருக்களில் சாக்கடை வாய்க்கால் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும், சேதமடைந்த தெருக்கள் சீரமைத்துக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக அவர், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.
 இதுபோல் ரெட்டையாம்பட்டி அருகே குறவர் காலனியில் பொதுமக்களிடம் குறைகேட்டார். அப்போது, பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்தனர். மேலும், இலவச மனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
 தனது தொகுதியில் சுமார் 60 ஊராட்சிகள் இருப்பதாகவும், 4 மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் குறைகளை நேரில் கேட்டு, அரசு நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 இதில், மோகனூர் ஒன்றிய அதிமுக செயலர் ஆர்.கருமண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் உஷாராணி, மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com