நாமக்கல் தொகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு: பி.ஆர்.சுந்தரம் எம்.பி. தகவல்

நாமக்கல் மக்களவை தொகுதி முழுவதும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கிட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக

நாமக்கல் மக்களவை தொகுதி முழுவதும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கிட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தெரிவித்தார்.
 நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் - நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி நிலவேம்பு கசாயம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம்கள் நடத்திட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இதன்படி, இதற்கான முகாம்கள் புதன்கிழமை பல்வேறு இடங்களில் தொடங்கின.
 ராசிபுரம் நகராட்சிக்குள்பட்ட 3 இடங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் பட்டணம், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இம்முகாமினை பி.ஆர்.சுந்தரம் தொடங்கி வைத்து அவர் பேசியது: தமிழக அரசு டெங்கு தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சில கட்சியினர் தவறான தகவல்களை அளித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
 எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் அரசு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு ரூ.23.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பரிசோதனை செய்யும் நவீன இயந்திரங்களை அரசு மருத்துவமனைகளுக்கு அளித்துள்ளது.
 நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பரமத்தி உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு கசாயம் தயாரித்து பொதுமக்களுக்கு அளிக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பொது சுகாதாரத் துறையினர் நிலவேம்பு கசாயம் தயாரித்து, பொதுமக்களுக்கு ஒரு மாதத்துக்கு வழங்க முடியும் என்றார்.
 தொடர்ந்து பல்வேறு இடங்களில் தொடங்கிய முகாமில் பங்கேற்று நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியில், ராசிபுரம் நகராட்சி ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி, ஓ.சவுதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் டாக்டர் எம்.செங்கோட்டுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com