மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தர்னா

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாமக்கல்லில் புதன்கிழமை தர்னா நடைபெற்றது.

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாமக்கல்லில் புதன்கிழமை தர்னா நடைபெற்றது.
 நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற தர்னாவுக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவர் ராஜசேகர், மாவட்டத் தலைவர் கைலாசம், செயலர் கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வாங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
 இதில் தமிழ்நாடு மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ், செயலர் ராஜகோபால், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலர் மூர்த்தி, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் அருள், டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கச் செயலர் வேலுசாமி உள்ளிட்டோர் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினர்.
 போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் பேசியது, மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. ஏற்கெனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மோட்டார் போக்குவரத்து தொழில் செயல் இழந்துள்ளது.
 தற்போது மேலும் நெருக்கடியை ஏற்படுத்த மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை கொண்டு வர உள்ளது.
 எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதையும் மீறி சட்டத்தை அமல்படுத்தினால், இந்த தொழிலில் உள்ளவர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலை உருவாகும் என்றார்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com