நாமக்கல் கவிஞருக்கு அரசு சார்பில் மணி மண்டபம்: அமைச்சர் பி.தங்கமணி

நாமக்கல்லில் தமிழக அரசின் சார்பில் நாமக்கல் கவிஞருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி.

நாமக்கல்லில் தமிழக அரசின் சார்பில் நாமக்கல் கவிஞருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி.
 நாமக்கல்லில் உள்ள கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தில், அவருடைய 129-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் உள்ளிட்டோர் பங்கேற்று கவிஞரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர். கவிஞரின் புகழைப் போற்றும் வகையில் அவர் எழுதிய காந்தியப் பாடல்கள், சுதந்திர வேட்கைப் பாடல்களை இளைஞர்கள் பாடினர்.
அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியும் இடம் பெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியது:
தமிழக அரசின் சார்பில் நாமக்கல்லில் கவிஞருக்கு மணி மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழக அரசின் தலைமை செயலகக் கட்டடம் ஒன்றுக்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என்று பெயர் சூட்டியும், நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி என்று பெயர் சூட்டியும் அழகு பார்த்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  நாமக்கல்லில் உள்ள கவிஞரின் இல்லத்தை தமிழக அரசின் அரசுடைமையாக்கி  உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார் அமைச்சர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
தரிசு நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்யும் பணிகளுக்கு, இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள், நாமக்கல் சார் ஆட்சியர் பி. கிராந்திகுமார், நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், கவிஞர் சிந்தனைப் பேரவை தலைவர் டி.எம்.மோகன், தமிழ் ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com