களிமேடு தடுப்பணை திட்டம்: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்படுமா?

பரமத்திவேலூர் வட்டம், ஓலப்பாளையம் அருகே களிமேடு பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில்

பரமத்திவேலூர் வட்டம், ஓலப்பாளையம் அருகே களிமேடு பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இத்திட்டம் புத்துயிர் பெறும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியிலிருந்து துவங்கி பூம்புகார் வரை சுமார் 800 கிலோ மீட்டர் பயணம் செய்கிறது காவிரி ஆற்றி நாமக்கல் மாவட்டத்தில் சோழசிராமணியில் கதவணையும், ஜேடர்பாளையத்தில் படுகை அணையும் மட்டுமே உள்ளன.
இந்த படுகை அணை மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்னரே கட்டப்பட்டதாகவும், அதுபோல பரமத்தி சீமையை ஆண்ட குறுநில மன்னர் அல்லாள இளைய நாயக்கரால், ராஜா வாய்க்கால் வெட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ராஜா வாய்க்கால் மற்றும் அதன் பிரிவு வாய்க்கால்களான கொமராபாளையம், பொய்யேரி, மோகனூர் ஆகிய வாய்க்கால்கள் மூலம் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான வடுகப்பட்டி வரை உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் வாங்கல் வாய்க்கால் விவசாயிகளும், பொதுமக்களும் பாசன வசதி பெற்று வருகின்றனர்.
இந்த வாய்க்காலில் பொதுவாக மழைக் காலங்களில் மட்டுமே முழு பாசன வசதியைப் பெற முடிகிறது. வெள்ளப் பெருக்கு காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் போதிய நீர்சேகரிப்பு ஆதாரம் இல்லை. இதனால் பரமத்தி வேலூர் வட்டம், ஓலப்பாளையம் அருகே உள்ள களிமேடு பகுதியில் நாமக்கல் மாவட்டத்தையும், கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் சுமார் 750 மீட்டர் நீளத்தில் 1.5 மீட்டர் உயரத்துக்குத் தடுப்பணை கட்டுவதற்கான திட்டம் முன்பு தயார் செய்யப்பட்டது.
பின்னர் இத்திட்டம் அரசுக்கு பொதுப்பணித் துறை மூலம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஏனோ காரணத்தால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், வேலூர் உள்ளிட்ட பேரூராட்சிகளும், பரமத்தி மற்றும் மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களும் பயன் பெறும்.
தற்போது தமிழக அரசு நீர்நிலைகளைத் தூர்வாருதல் உள்ளிட்ட நீர்வள ஆதாரப் பணிகளை மேற்கொண்டு வருவதால் கிடப்பில் போட்டப்பட்ட களிமேடு தடுப்பணைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்களும், விவசாயிகளும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com