ராசிபுரம் புதை சாக்கடை திட்டப் பணியில் தாமதம்: குப்பை, தூசுகளால் பொதுமக்கள் அவதி 

ராசிபுரம் நகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு பெரும் அவதியடைந்து வருகின்றனர். 

ராசிபுரம் நகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
 இத் திட்ட பணிகளால் நகரச் சாலைகள் குண்டும் குழியுமாகச் சேதமடைந்து போக்குவரத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
 இப்பணிகளால் நகரில் குப்பைகள், தூசுகள் அதிக அளவு பரவி வருவதால், பொதுமக்களுக்கு நுரையீரல் நோய்ப் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள்தொகை உள்ளது.
 இந்தப் பகுதியில் ஜவுளி உற்பத்தி தொழில், அதிக அளவிலான கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டம்-2013-ன் கீழ் புதை சாக்கடை திட்டப் பணிகள் துவங்க, நகராட்சி நிர்வாக துறையால் ரூ. 55.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்திடம் திட்ட அறிக்கை சமர்பித்து நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு இதற்கான பணிகள் கடந்த மார்ச் 2015-ல் துவங்கப்பட்டன.
 இந்தப் பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்பட வேண்டிய நிலையில், இன்னமும் முடிக்கப்படாமல் நீண்டு வருவதால், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
 தற்போது, நகரில் அனைத்து இடங்களிலும் இத்திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு சாலைகள், சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக பழைய பேருந்து நிலையத்துக்குப் பேருந்துகள் செல்லும் பிரதான சாலையான சுவாமி சிவானந்தா சாலை திட்டப் பணிகளால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், தற்போது நகரில் நெரிசல் அதிகரித்துள்ளது.
 இவ்வழியில் செல்ல வேண்டிய இரு சக்கர வாகனங்கள் மாற்று வழியில் சென்றாலும், குறுகிய சாலைகள் என்பதால் வாகன நெரிசல் அதிக அளவில் உள்ளது. இத் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் அனைத்து சாலை சந்திப்புகளிலும் நடைபெறுவதால் பிரதான சாலைகள் மட்டுமின்றி சிறிய சிறிய தெருக்களிலும் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் மாற்று வழியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
 நாமக்கல் சாலையில் தொடரும் நெரிசல்: தற்போது கடந்த சில நாள்களாக நாமக்கல் பிரதான சாலையில் குழிகள் தோண்டப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இச்சாலை பொதுமக்கள், அலுவலக வேலை செல்வோர், பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிக அளவில் செல்லும் பிரதான சாலை என்பதால் காலை, மாலை வேலைகளில் அதிக நெரிசல் காணப்படுகிறது.
 இதனால் இச்சாலையில் பணிகள் முடியும் வரை நாமக்கல் சாலையை ஒரு வழிப்பாதை சாலையாக மாற்றியமைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
 குப்பை, தூசுகளால் அபாயம்:
 ராசிபுரம் நகரம் முழுவதும் இப்பணிகள் நடைபெற்று வருவதாலும், அதிக வாகனங்கள் செல்வதாலும், குப்பைகள் தூசுகள் அதிகம் பரவுகிறது. இதனால் கனரக வாகனங்களின் பின் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தங்கள் நாசிகளைப் பிடித்தபடியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் முக கவசம் (மாஸ்க்) போட்டபடியே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 இதனால் பொதுமக்களுக்கு நுரையீரல் நோய், மூச்சுத் திணறல் நோய் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க நகரில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தத் திட்டத்தை முடித்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com