ராசிபுரம் அருகே அழுகிய நிலையில் அரசு மருத்துவர் சடலம் மீட்பு

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் அரசு மருத்துவ அலுவலர் சடலம் அழுகிய நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் அரசு மருத்துவ அலுவலர் சடலம் அழுகிய நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (50).  அரசு மருத்துவர். இவர், குருசாமிபாளையம், சிங்களாந்தபுரம்,  வடுகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலராகவும் உள்ளார்.  இவரது மனைவி ஜெயா.  இவர்களுக்கு செளமியா, சோனா என இரு மகள்கள் உள்ளனர்.
செந்தில்குமார், நாமகிரிப்பேட்டையில் வீட்டின் அருகிலேயே தனியாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தார்.  இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.  இதனால் அடிக்கடி கணவன்,  மனைவிக்கிடையே தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில்,  இவரது மனைவி ஜெயா இந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்கு  மாறினாராம்.
தற்போது தனது குழந்தைகளையும் மதம் மாற்றும் முயற்சியில் ஜெயா ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.  இதனால் தம்பதிக்கிடையே தகராறு அதிகரித்துள்ளது.  இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் செந்தில்குமாரைக் காணவில்லை.  இதுகுறித்து ஏப்ரல் 16-ம் தேதி கணவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் மனைவி ஜெயா புகார் அளித்தார்.
போலீஸார் விசாரித்துவந்த நிலையில்,  செவ்வாய்க்கிழமை காலை மருத்துவரின் வீட்டின் அருகில் உள்ள பருத்திக் காட்டில் அழுகிய  நிலையில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில்,  நிகழ்விடம் சென்று போலீஸார் விசாரணை நடத்தியதில் இறந்தது செந்தில்குமார்தான் என்பதும்,  அவர் கழுத்தறுத்து இறந்திருப்பதும் தெரியவந்தது. 
மேலும்,  அவரது சடலத்தின் அருகில் மருத்துவமனையில் பயன்படுத்தும் கத்தி இருந்தது.
இதையடுத்து,  போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,  இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவுசெய்து குடும்பப் பிரச்னையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா?  அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com