நெகிழிப் பைகளை பயன்படுத்த வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

நெகிழிப் பைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வேண்டுகோள் விடுத்தார். 

நெகிழிப் பைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வேண்டுகோள் விடுத்தார். 
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மருக்கலாம்பட்டி ஊராட்சி, வேலக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேசியது: கிராம சபைக் கூட்டம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது.  இந்தக் கூட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் கோரிக்கைகளை,  வளர்ச்சித் திட்டங்களை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திட தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு,  முக்கியமான கருத்துகளையும் அறிந்து கொள்ள வேண்டும். 
தமிழக அரசு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும், இருப்பு வைக்கவும் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகள்,  துணிப் பைகள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். 
வீடுகளில் தனி நபர் கழிப்பிடம் கட்டி, அதனை முழுமையாகப் பயன்படுத்திட வேண்டும்.  சுகாதாரத்தைப் பாதுகாப்பதனால் பல்வேறு நோய்கள் வராமல்  பாதுகாத்துக் கொள்ள முடியும்.  வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிப்பவர்களிடம் வழங்கிட வேண்டும்.  விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்திட வேண்டும் என்றார். 
முன்னதாக,  சுகாதார உறுதி மொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது.   ஆட்சியர் உறுதிமொழியை வாசிக்க பொதுமக்கள்,  அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.  
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பி.பாலமுருகன்,  வேளாண்மை இணை இயக்குநர் ஜே.சேகர்,  ஊராட்சிகள் உதவி இயக்குநர் க.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஆர்.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
அதனைத் தொடர்ந்து,  நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி பொது விருந்தில் ஆட்சியர் கலந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com