பரமத்தி வேலூர் வட்டாரப்  பள்ளிகளில் சுதந்திர தின விழா

பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு பள்ளியின் தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொருளாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.  தொழிலதிபர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 
மணியனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னுசாமி, ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வேலுசாமி, அரிமாசங்கத் தலைவர் ஸ்டேன்லி சரவணன்,அரிமா சங்க செயலாளர் துரைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.  இயக்குநர்கள், இருபால் ஆசிரிய,ஆசிரியைகள், மாணவ,மாணவியர்கள்,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி முதல்வர் உஷாகுமாரி வரவேற்றார்.  பள்ளியின் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நம் நாடு சுதந்திரம் பெற்றதையும்,  அதற்காக போராடிய தியாகிகள் குறித்தும் பேசி நினைவு கூர்ந்தார்.  செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கலாசாரத்தையும், தேசப்பற்றையும் பறை சாற்றும் விதமாக மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  விழாவில் இயக்குநர்கள்,ஆசிரிய, ஆசிரியைகள்,பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
பாண்டமங்கலம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தளாளர் பழனிச்சாமி வரவேற்று பேசினார்.  ஸ்ரீ விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர்  சுப்பிரமணியம், பொருளாளர் வேலுச்சாமி, கல்விசார் இயக்குநர்கள் சுப்பிரமணியம்,காளியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  ஸ்ரீ விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நெடுஞ்செழியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசினார்.  சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விவேகாந்தா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியமன் நன்றி கூறினார்.   
பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளியின் தலைவர் சண்முகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.  விழாவில் சுதந்திர தினம் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல் பரமத்தி வேலூர் கல்லூரி சாலையில் உள்ள மழலையர் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளியின் இயக்குநர் சேகர் கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.  விழாவில் நிர்வாகிகள் சக்திவேல், ராஜா,அருள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
ஜேடர்பாளையம் மேல்நிலைப்பள்ளி, கீரம்பூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, நல்லியாம்பாளையம் புதூர்,வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட அரசினர் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இதில் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேலூர் கந்தசாமி கண்டர் மேல் நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவும், ஆண்டு விழாவும் நடைபெற்றது.  இதில் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரிய,ஆசிரியைகள்,பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு சுற்று வட்டார கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், அரசு அலுவலங்கள் சார்பிலும், அரசியல் கட்சியிகள், தனியார் தொண்டு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 72-வது சுதந்திர தினவிழா  நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின்  தாளாளர்.மு. கருணாநிதி தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 
இந்நிகழ்ச்சியில் திருமதி கிருஷ்ணவேணி கருணாநிதி மேலாண்மை இயக்குநர்  அர்த்தநாரீஸ்வரன், துணை மேலாண்மை இயக்குநர். ஸ்ரீராகநிதி,இணைச் செயலாளர்.கிருபாநிதி, துணைத் தாளாளர் நிவேதனாகிருபாநிதி, செயல் இயக்குநர், கல்விக் குழுமங்களின் ஆலோசகர் முனைவர் விஸ்வநாதன்,சொக்கலிங்கம் முதன்மை அதிகாரி, வரதராஜு மற்றும்அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.
எஸ்.பி.கே.பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தாளாளர் பி.செங்கோடன் தேசியக்கொடி ஏற்றி வைத்து விழாப் பேருரையாற்றினார். இவ்விழாவின் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பேச்சு போட்டி,  ஓவியப் போட்டி மற்றும் தேசிய பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
அண்ணா சிலை அருகில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்ற விழாவிற்கு வழக்குரைஞர் சண்முகம் தலைமை வகித்தார். லட்சுமி சரஸ்வதி மில் இயக்குநர் உதயகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். 
இது போல நகரின் பல பகுதிகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகள் சார்பில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com