வெள்ள பாதிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் இன்று ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஆக.19) நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஆக.19) நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.
இதுகுறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியது:
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 2,423 பேர் மீட்கப்பட்டு, 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஜனதா நகர், ஆவாரங்காடு, ஆவத்திப்பாளையம், சமயசங்கிலி, ஓங்காளியம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, இந்திரா நகர், புத்தர் தெரு, அண்ணா நகர், கலைமகள் வீதி, காவேரி நகர் ஆகிய குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 
மேலும், பள்ளிபாளையம், குமாரபாளையம், கொக்கராயன்பேட்டை பாலங்கள் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் அனைத்துத் துறைகளின் சார்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
ஆலோசனை
இதனிடையே, பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கா.பாலச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் தங்கமணி ஆலோசனை நடத்தினார். 
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகள், மருத்துவம் குறித்துக் கேட்டறிந்தார். வெள்ளப் பெருக்கால் சேர்ந்துள்ள சுமார் 15 டன் குப்பைகளை அப்புறப்படுத்தவும், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்டவற்றை உடனே வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா உடனிருந்தார்.
முதல்வர் பயணம்
சென்னையில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 மணிக்குப் புறப்படும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்துக்கு காலை 7.30 மணிக்கு வந்தடைகிறார். அங்கிருந்து காரில் காலை 9 மணி அளவில் ஈரோடு மாவட்டம், பவானி வழியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம், காவிரிக் கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார். 
அதன்பிறகு, ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடும் முதல்வர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளப் பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரண உதவி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com