மாநில அளவிலான டெண்டரை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்  2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து.

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்  2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து.  இந்த நிலையில்,  மாநில அளவிலான வாடகை டெண்டர் முறையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 4,500 டேங்கர் லாரிகள் உள்ளன. தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தியன் ஆயில்,  பாரத் பெட்ரோலியம்,  ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் இந்த டேங்கர் லாரிகள் இயங்குகின்றன.
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் வாடகை டெண்டர்,  நிகழாண்டு முதல் 5 ஆண்டு காலமாக மாற்றப்பட்டுள்ளது.  இதன்படி, 2018-2023ஆம் ஆண்டுக்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகியது.
இந்த அறிவிப்பில் மண்டல அளவில் நடைபெறும் முறை மாற்றப்பட்டு, இனிமேல் மாநில அளவில் டெண்டர் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரித்தனர்.  மேலும்,  பழைய முறைப்படி டெண்டர் நடத்த வலியுறுத்தி கடந்த 12-ஆம் தேதி முதல் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அவர்களது போராட்டம் செவ்வாய்க்கிழமை 2 ஆம் நாளாக நீடித்தது.  இதே கோரிக்கையை வலியுறுத்தி, மேற்கு வங்கம்,  பிகார்,  ஒரிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு:
இதனிடையே,  வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
மாநில அளவிலான டெண்டர் முறையை ரத்து செய்து,  பழைய முறைப்படி மண்டல அளவிலான டெண்டர் நடத்துவதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனத்தினர் வெளியிட்ட பின்னரே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.
வேலைநிறுத்தப் போராட்டத்தால் தென் மண்டலத்தில் தினமும் சுமார் 600 டேங்கர் லாரிகளில் எரிவாயு நிரப்புவது தடைப்பட்டுள்ளது.  இதனால் லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com