விளைபொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்ற இயந்திரம்: விவசாய குழுக்கள் விண்ணப்பிக்க அழைப்பு

விளைபொருள்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற இயந்திரம் வாங்க அரசு 75 சதவீதம் மானியம் வழங்குகிறது.

விளைபொருள்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற இயந்திரம் வாங்க அரசு 75 சதவீதம் மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விவசாய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியினைப் பெருக்கும் வகையில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மானாவாரி தொகுப்புகளிலுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அந்தந்தத் தொகுதிகளில் உள்ள பயிர்களுக்கான விளைபொருள்களை மதிப்புக் கூட்டும் வகையிலான மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் மையம் அமைத்திட மானியம் வழங்கப்படவுள்ளது.
வேளாண் விளைபொருள்களை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்டப் பணிகளுக்கான மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கும் மற்றும் அதற்குரிய பணி மூலதனம் ஆகியவை உள்ளிட்ட மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ. 10 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.
மீதி 25 சதவீதத் தொகையினை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக் குழு செலுத்த வேண்டும். மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் அமைப்பதற்கு ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுவினைத் தேர்வு செய்து சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிற்கு வழங்க வேண்டும்.
தொகுப்பு மேம்பாட்டுக் குழு, விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
விண்ணப்பித்துள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்குத் தேவையான கட்டமைப்புகள், தேவைப்படும் இயந்திர விவரங்கள் மற்றும் ஆவணங்களை உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சரிபார்த்த பின்னர் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படும். பின்னர், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவி செயற்பொறியாளரால் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கிட பணி ஆணை வழங்கப்படும்.
இயந்திரங்கள் வழங்கப்பட்டு, மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் அமைக்கப்பட்ட பின் உதவி செயற்பொறியாளரால்  ஆய்வு செய்யப்பட்டு, இயந்திரங்கள் திருப்திகரமாக செயல்படுகிறது என்ற அறிக்கையினை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுவிடமிருந்து பெற்று நிறுவனங்களுக்கு தொகுப்பு மேம்பாட்டுக் குழுவின் மூலம் மானியத் தொகை விடுவிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட தொகுப்பு மேம்பாட்டுக் குழுவுக்கு அளிக்க வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com