திருவிழா நடத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்னை: கோயில்களுக்கு "சீல்
By DIN | Published on : 14th January 2018 01:54 AM | அ+அ அ- |
கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டதால், வருவாய்த் துறை அதிகாரிகள் கோயில்களுக்கு சனிக்கிழமை "சீல்' வைத்தனர்.
நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட தும்மங்குறிச்சி மேலப்பட்டி, மேல்முகம் கிராமத்தில் சின்ன காமாட்சி அம்மன், பெரிய காமாட்சி அம்மன் மற்றும் பெரியசாமி கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி ஒரு தரப்பினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், வழக்கத்துக்கு மாறாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 4-ஆம் தேதி ஊரில் கூட்டம் போட்டு, மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு, வரும் 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இக்கோயிலில் திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர். மற்ற சமுதாய மக்களை திருவிழாவில் கலந்துகொள்ள விடாமல் தடை செய்யவும் முடிவு செய்து உள்ளனர். இதனால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்தி, ஜாதி கலவரம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், நாமக்கல் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில், மேல்முகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில், கொங்கலம்மன், விநாயகர் கோயில், பெரியகாமாட்சி அம்மன், சின்ன காமாட்சி அம்மன், பெரியசாமி கோயில் மற்றும் வீரமாத்தியம்மன் கோயில் உள்பட 8 கோயில்களை வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டி "சீல்' வைத்தனர். இதேபோல் கோயில் வீடு ஒன்றுக்கும் "சீல்' வைக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.