அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க 500 பேருக்கு ஊக்க நிதி

அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க உயர்கல்வி மாணவர்கள் 500 பேருக்கு ஊக்க நிதி அளிக்கப்படவுள்ளது என தமிழ்நாடு


அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க உயர்கல்வி மாணவர்கள் 500 பேருக்கு ஊக்க நிதி அளிக்கப்படவுள்ளது என தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், உறுப்பினர் செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், எக்ஸல் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் விமானவியல் கண்காட்சி எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
2 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியின் நிறைவு விழா நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்கள் வி.கே.சண்முகநாதன், ஈ.பழனிச்சாமி, அறிவியல் அலுவலர் ரமணன், தொழிற்சாலை உறவுகள் மற்றும் ஆராய்ச்சித் திட்ட இயக்குநர் டி.தேவகுமார், தொழில்நுட்ப இயக்குநர் என்.செங்கோட்டையன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், உறுப்பினர் செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன் பேசியது: மாணவர்களுக்கு மன தைரியம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கிலும், படித்த பாடத்தை திரும்பவும் நினைவூட்டவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது.
கணித மேதை ராமானுஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கணித நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.40 லட்சம் நிதி அளிக்கிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையும் ரூ.30 லட்சம் அளிக்கிறது. இதற்காக மாணவர்களிடம் இருந்து 7,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
நிகழாண்டில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க பொங்கலுக்கு பிறகு அந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். இதன்மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க உயர்கல்வி மாணவர்கள் 500 பேருக்கு ஊக்க நிதி அளிக்கப்படும்.
மேலும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப , மாநில மன்றத்தின் இன்ஸ்பயர் விருது படைப்புகளுக்காக கடந்த 2010 முதல் 2016 வரையில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் 78,000 பேருக்கு தலா ரூ.5,000 வீதம் ஊக்க நிதி அளிக்கப்பட்டு புதிய அறிவியல் படைப்புகள் கண்டுபிடிக்க உதவி புரிந்துள்ளோம்.
சக்குராய் பரிமாற்ற திட்டத்தில் ஜப்பான் நாட்டிற்கு தமிழக மாணவர்களை அனுப்பியுள்ளோம். இதன்மூலம் அறிவியல் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்றார்.
எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் என்.மதன் கார்த்திக், சென்னை ஆயில்டெக் தொழில் நிறுவனத் தலைவர் திலிப் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கணிதவியல் வினாடி, வினா போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கண்காட்சியில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்க்கிடெக்சர் கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்பாற்றல் கண்காட்சி, விமானவியல் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், குட்டி விமானங்களின் விமானவியல் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக, இதில் காற்று, சூரிய ஆற்றல் சேமிப்பு, ரோபோ மனிதன், கட்டடக் கலை மாதிரிகள், தகவல்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com