தமிழகத்தில் பாஜகவால் தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்: தமிழிசை சௌந்திரராஜன்

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.
நாமக்கல் மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: தென் மாவட்டங்களில் தற்போது மழை பெய்வது மகிழ்ச்சி தான். ஆனால் சரியான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால் கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்னும் திரும்பவில்லை. மேலும், இயற்கை சீற்றத்தால் கடலுக்கு செல்ல முடியவில்லை என்பதும், விவசாயிகளின் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் மனவருத்தம் தருகிறது.
மீன்பிடி தடை காலங்களில் எவ்வாறு நிவாரணம் வழங்கப்படுகிறதோ, அதே போல் உப்பளத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடைக்கால நிவாரணம் தரவேண்டும்.
திரிபுராவில் எப்படி சில சதவீத வாக்குகளை பெற்று பாஜக வெற்றி பெற்றதோ, அதே போல் தமிழகத்திலும், தனது முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
பாஜக-வை பொருத்தவரை தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொடுத்துள்ளது. கடல் சார் திட்டங்களுக்கு தமிழகத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. காவிரி நதி நீர்ப் பிரச்னையில், உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளதோ அதை நடைமுறை படுத்துவோம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.
தற்போது கூட 180 மருந்துகளுக்கான விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. ரூ.1,000 கோடி ரூபாய் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்டம் எல்லா இடத்திலும் நிறைவேற்ற முடியாது. இது தமிழகத்தில் கிடைக்கிறது என்றால், தமிழகத்துக்கு அது பலம். இது தமிழகத்துக்கு எவ்வளவு பொருளாதரம், வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என எண்ணிப்பார்க்க வேண்டும். மத்திய அரசுக்கும் தமிழக அரசு மீது அக்கறை இருக்கிறது. மக்களுக்கு நன்மை தராத திட்டத்தை அது நிறைவேற்றாது.
தேனி தீவிபத்து சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அதிகரித்து தரவேண்டும். 
தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய புலனாய்வுத் துறை இதனைக் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருகிறது.பெண்களுக்கு எதிரான தாக்குதல் மிக அதிகமாக இருக்கிறது. வலுவான கரங்களைக் கொண்டு பெண்கள் மீதான தாக்குதலை தடுக்கவில்லை என்றால், பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.
இதனால் பெண்களுக்கு தனி பாதுகாப்பு படை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி, கோட்ட பொறுப்பாளர் ஏ.சி.சண்முகம், கபிலர்மலை தொகுதி பொறுப்பாளர் கே.மூர்த்தி, மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவ வினாயகம், மாவட்ட தொழில்பிரிவு துணைத் தலைவர் வி.சேதுராமன், மாவட்ட பொதுச் செயலர் ஆர்.செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com