எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 21,150 பேர் தேர்ச்சி: தேர்ச்சி சதவீதத்தில் பின்னடைவு

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 21,150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 19-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 10ஆவது இடத்தில் இருந்தது

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 21,150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 19-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 10ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் 308 பள்ளிகளைச் சேர்ந்த 11,685 மாணவர்கள், 10,560 மாணவிகள் என மொத்தம் 22,245 பேர் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதினர். இதில் 10,949 மாணவர்கள், 10,201 மாணவிகள் என மொத்தம் 21,150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.70 சதவீதம், மாணவிகள் 96.60 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நிகழாண்டு மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 95.08 சதவீத தேர்ச்சியுடன் 19ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 96.54 சதவீதம் தேர்ச்சியுடன் 10 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்வு எழுதியவர்களில் தமிழ் பாடத்தில் 96.42 சதவீதமும், ஆங்கிலப் பாடத்தில் 96.18 சதவீதமும், கணிதப் பாடத்தில் 98.47 சதவீதமும், அறிவியல் பாடத்தில் 98.47 சதவீதமும் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 96.75 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் 143 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10,831 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 9,964 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத் தேர்ச்சி 92 சதவீதம். மாவட்டத்தில் 147 பள்ளிகள் 100 சதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 37 அரசுப் பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் பள்ளிகள், 2 நலத் துறை பள்ளிகள் 100 சதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
மாவட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிய அரசுப் பள்ளிகள்
நாமக்கல் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் 9 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது கல்வித் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் 5 ஆம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட நிலையில், எஸ்எஸ்எல்சி தேர்வில் நேரிட்ட இந்தப் பின்னடைவுக்கு அரசுப் பள்ளிகள் மீது அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் 2.64 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் 94.57 சதவீதமாக இருந்தது, நிகழாண்டில் 91.93 ஆகக் குறைந்துள்ளது. நலத் துறைப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 5.60 சதவீதம் குறைந்துள்ளது. நகராட்சிப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 4.08 சதவீதம் குறைந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் 0.89 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. இதனால்தான் ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் மாநில அளவில் 1.46 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி சதவீதம் குறைந்து, மாநில அளவில் 19 இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மெட்ரிக். பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.06 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயத்தில் சுயநிதிப் பள்ளிகளில் 0.22 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com