குடகு தனிமாநில அந்தஸ்து பெற்றால் தமிழகத்துக்கு காவிரி குடிநீர் வழங்கப்படும்: குடகு தேசிய கவுன்சில் தலைவர் பேட்டி

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் பகுதி மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கூர்க்கா லேண்ட் தனி மாநில அந்தஸ்து வழங்கினால்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் பகுதி மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கூர்க்கா லேண்ட் தனி மாநில அந்தஸ்து வழங்கினால் தமிழகத்துக்கு காவிரி குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படாது என கொடவா தேசிய கவுன்சில் தலைவர் நாச்சப்பா கொடவா தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தின் குடகு பகுதியில் வாழும் பூர்வீகக் குடிகளான கொடவா இன மக்கள், கூர்க் லேண்ட் தனி மாநில அந்தஸ்து வேண்டும் என பல ஆண்டுகளாகக் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், குடகு மீட்போம்-காவிரியைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் தலை காவிரியில் துவங்கி மேகதாது, ஒகேனக்கல், மேட்டூர் அணை, கல்லணை வழியாக பூம்புகார் வரை இக் குழுவினர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்களுடன், தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாகண்ணு, தமிழக மக்கள் கட்சி நிறுவனர் நல்வினை செல்வன் ஆகியோர் ஆதரித்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ராசிபுரம் வழியாக பயணம் செய்த இக் குழுவின் தலைவர் நாச்சப்பா கொடவா செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:
குடகுப் பகுதி எங்களின் தாய் மண். அங்கு சுமார் 1. 50 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறோம். 1956 வரை தனி மாகாண அந்தஸ்துடன் இருந்த குடகு பகுதி, மொழி வாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர், கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டது.
ஆனால், குடகு மாவட்டத்தைத் தனி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை மத்திய, மாநில அரசுகள் இதுவரை ஏற்கவில்லை. மலைவாழ் மக்களான எங்களுக்கு தனி நில உடைமை சட்டம் போன்ற சிறப்பு அந்தஸ்து உள்ளது.
ஆனால், கர்நாடக அரசு இதனை ஏற்க மறுக்கிறது. இதன் மூலம் கொடவா இன மக்களை நசுக்க கர்நாடக அரசு எண்ணுகிறது. எங்களது அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. எனவே, குடகை மீட்போம் என்ற கோஷத்துடன் அமைதி வழியில் ஆதரவு கேட்டு பயணம் மேற்கொண்டுள்ளோம். குடகு பகுதியை தனி மாநிலமாக அறிவித்தால், தமிழகத்துக்கு காவிரி குடிநீர் வழங்குவதில் தடை இருக்காது என்றார் அவர்.
பேட்டியின்போது, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அ. வியனரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com