முழு அடைப்புப் போராட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் 20 சதவீத கடைகள் அடைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு சுமார் 20 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.

நாமக்கல் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு சுமார் 20 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு கடை அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்தால் நாமக்கல் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
 பேருந்து, ஆட்டோ, கார் மற்றும் இதர வாகனங்கள் வழக்கம்போல ஓடின. இருப்பினும், பயணிகள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தது. நாமக்கல் நகரைப் பொருத்தவரையில் கடைவீதி, சேந்தமங்கலம் சாலை, சேலம் சாலை பகுதிகளில் ஒருசில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
 பெரும்பாலான கடைகள் திறந்து இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மாவட்ட அளவில் சுமார் 20 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.
 70 சதவீத லாரிகள்
 ஓடவில்லை...
 முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படவில்லை.
 இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தன்ராஜ் கூறியது:
 பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் டீசல் விலையைக் குறைக்கக் கோரி பலமுறை போராட்டங்களை நடத்தி உள்ளோம்.
 அந்த வகையில்தான் காங்கிரஸ் கட்சி அறிவித்த முழு அடைப்பு போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து இருந்தோம். தமிழகம் முழுவதும் சுமார் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு மட்டும் சுமார் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டது.
 இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 90 சதவீத மணல் லாரிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படவில்லை என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.
 முட்டை லாரிகளை பொறுத்த வரையில் தினசரி மாலை நேரத்தில்தான் லோடு ஏற்றிக்கொண்டு வெளிமாநிலங்களுக்குப் புறப்படும். எனவே முட்டைகளை வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.கே.பி. சின்ராஜ் தெரிவித்தார்.
 இதுபோல ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு பகுதியிலிலும் முழு அடைப்புப் போராட்டத்தால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
 ராசிபுரத்தில்...
 ராசிபுரம் பகுதியில் வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொடர்ந்து நகரில் உணவு விடுதிகள், மளிகைக் கடைகள் என 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
 வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கின. மேலும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாச்சல் ஏ. சீனிவாசன் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் ஆர். முரளி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி. பாலு, நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலர் மணிமாறன், நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் வீர. ஆதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 பரமத்தி வேலூரில்...
 பரமத்தி வேலூர்,பெத்தனூர், பரமத்தி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன. 80 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பரமத்தி வேலூர் வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி பேசினார். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 திருச்செங்கோட்டில்...
 திருச்செங்கோடு நகரில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அண்ணா சிலை அருகில் டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
 அதைத் தொடர்ந்து வணிக நிறுவனங்கள் கடையடைப்பு செய்தும், கனரக வாகனங்கள் இயக்காமல் இருக்கவும் அழைப்பு விடுத்து நான்கு ரத வீதிகளில் அமைந்துள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
 எதிர்க்கட்சிகள் அறிவித்த வேலை நிறுத்தத்துக்கு திருச்செங்கோட்டில் ஆதரவு இல்லாததால் அனைத்துக் கடைகளும் திறந்திருந்தன. ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் இயங்கின. பட்டறைமேடு பகுதியில் வழக்கம்போல லாரி, ரிக், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com