அண்ணா பிறந்த நாள் விழா: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி

நாமக்கல்லில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.


நாமக்கல்லில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
பசுமை நாமக்கல் மற்றும் சிவா கிரியேஷன்ஸ் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஓவியப் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது. பசுமை நாமக்கல் செயலர் தில்லை சிவக்குமார், பொருளாளர் சிவப்பிரகாசம், அண்ணா அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், சிவா கிரியேஷன் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி உலகம் புவனேஸ்வரி வரவேற்றார்.
பசுமை நாமக்கல் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து ஓவியப் போட்டியைத் துவக்கி வைத்தார். இதில், 3 மற்றும் 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மரம் நடுவோம் என்ற தலைப்பிலும், 5,6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் அற்ற நாமக்கல் என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டி நடைபெற்றது. 8,9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொசவம்பட்டி ஏரி உங்கள் கற்பனையில் என்ற தலைப்பிலும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பசுமையான நாமக்கல் என்ற தலைப்பிலுமாக 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு ஆகியோர் பிறந்த நாள் விழாவில் நடைபெறும் ஓவியப் போட்டியில் பங்கேற்பர் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்செங்கோட்டில்... பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, ஊர்வலமாகச் சென்று பிறந்தநாள் விழாவை சனிக்கிழமை கொண்டாடினர்.
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை தாங்கினார்.
நகர கழகச் செயலாளர் தி.த.மனோகரன், மாவட்ட துணைச் செயலாளர் இரா.முருகேசன், டி.எஸ்.முரளிதரன், எஸ்.கே.கார்த்திகேயன், பாலு, சந்திரன், செங்கோட்டுவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக பேரணியாக சென்று நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து, அண்ணாவின் கொள்கைகளை எடுத்துரைத்து கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. விழாவில் கட்சியின் நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கட்சியினர் என நூற்றுக்கும் மேற்படோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில்... நாமக்கல்லில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாள் விழா, நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ். காந்திசெல்வன் தலைமை வகித்தார். விழாவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ப.ராணி, சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் ரா. நக்கீரன், மாவட்டத் துணைச் செயலர் ராமலிங்கம், நகரப் பொறுப்பாளர் மணிமாறன், ஒன்றியச் செயலர்கள் பழனிவேல், பாலு, முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராசிபுரத்தில்... ராசிபுரம் பகுதியில் அண்ணா பிறந்த தின விழா அதிமுக, அமமுக., திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நடைபெற்றது. ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்ற விழாவில், நகர அதிமுக செயலரும், நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் அண்ணா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் எஸ்.வெங்கடாசலம், வி.கே.ஆர்.கே.ராமசாமி, கே.பி.எஸ்.சுரேஷ்குமார், கோபால், கலைவாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நடைபெற்ற விழாவில் நகர செயலர் வி.டி.தமிழ்செல்வன் தலைமையில் திரளான கட்சியினர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர். வெண்ணந்தூர் அமமுக சார்பில் ஒன்றிய செயலர் கோபால் தலைமையில் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட இளைஞரணிச் செயலர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com