குறைந்த அளவு பணமே வாடிக்கையாளர்களுக்கு விநியோகம்: அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் சிரமம்

வங்கிகளில் போதிய பணம் கையிருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 வரையில் மட்டுமே பணம் வழங்கப்படுகிறது.
குறைந்த அளவு பணமே வாடிக்கையாளர்களுக்கு விநியோகம்: அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் சிரமம்

வங்கிகளில் போதிய பணம் கையிருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 வரையில் மட்டுமே பணம் வழங்கப்படுகிறது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனால் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் மாற்றி புதிய நோட்டுகளை பெற்று வந்தனர். தற்போது மக்களிடம் பழைய நோட்டுகள் வைப்புத் தொகையாக மட்டுமே பெறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
ஏடிஎம் மையங்களில் ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்பதால், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் வங்கியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சேலம் நகரில் சுமார் 60 முதல் 70 வங்கிக் கிளைகள் உள்ளன. இதில், அனைத்து வங்கிகளிலும் பணம் எடுக்க வியாழக்கிழமை முதல் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வங்கிகளில் போதிய பணம் கையிருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவு பணம் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டது.
இதனால் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகபட்சம் ரூ.7,000 வரையிலும், இந்தியன் வங்கியில் ரூ.5,000 வரையிலும் மட்டுமே பணம் வழங்கப்பட்டது. இதுபோல, பணம் கையிருப்பைப் பொறுத்து வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை விமலா கூறுகையில், நான் அத்தியாவசிய தேவைக்காக ரூ.24,000 எடுக்கலாம் என்று கோட்டை பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்றேன். ஆனால், வங்கியில் ரூ.7,000 தான் தர முடியும் என்றனர். இதனால் ரூ.7,000 மட்டுமே பெற்று வந்தேன் என்றார்.
இதுதொடர்பாக, மணியன் என்பவர் கூறுகையில், நான் இந்தியன் வங்கியில் ரூ.20 ஆயிரம் பணம் எடுக்க சென்றேன். ஆனால் போதிய பணம் இல்லாததால் ரூ.5,000 மட்டுமே வழங்கினர். நகரில் உள்ள ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இல்லாததால் 90 சதவீத அளவுக்கு ஏடிஎம் மையங்கள் மூடி கிடக்கின்றன. புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று வழங்கும் போது தான் இந்த நிலைமை மாறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பணம் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு போதிய பணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக, சேலம் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் சுவாமிநாதன் கூறியது:
சேலம் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. இதில் அனைத்துக் கிளைகளிலும் போதிய பணம் கையிருப்பு இல்லை. வங்கிகளில் ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகள் போதிய கையிருப்பில் இல்லை. புதிய ரூ.500 நோட்டுகள் அதிகளவில் வந்தால் தான் பணத் தட்டுப்பாடு நீங்கும்.
மத்திய அரசு புதிய நோட்டுகளை அதிகளவில் புழக்கத்துக்குவிட வேண்டும். அப்போது தான் சிரமத்துக்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தீர்வு கிடைக்கும். சேலம் நகரில் சுமார் 10 முதல் 15 ஏடிஎம் மையங்களே செயல்படுகிறது. இதனால் ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம்
அலைமோதுகிறது.
நகரில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களும் செயல்படும் போது மக்கள் சிரமம் தவிர்க்கப்படும். அடுத்து 10 முதல் 15 நாள்களில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கலாம் என்றார்.
வங்கி அதிகாரிகள் சிறைபிடிப்பு: சேலம் சூரமங்கலம் அருகே உள்ள கனரா வங்கியில் வியாழக்கிழமை காலை ஏராளமான பொதுமக்கள் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏற்கெனவே டோக்கன் பெற்ற 250 பேர் மட்டும் வரிசையில் நில்லுங்கள். மற்றவர்கள் மறுநாள் வாருங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வங்கி அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வங்கியைத் திறக்க விடாமல் அதிகாரிகளை சிறைபிடித்தனர். இதனால், போலீஸார் வரவழைக்கப்பட்டு சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து வரிசையில் நின்ற பொதுமக்கள் வங்கிக்குள் சென்று பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com